CRIME
அடப்பாவமே..! ஆபாசமாகப் பேசியதால் ஆத்திரம்… 23 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொடூரக் கொலை.. போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த பயங்கரம்..!!
சென்னை மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில், 100-க்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயதுடைய நிஷாந்த் என்பவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால், கடந்த ஆறு மாதங்களாக இந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இதே மையத்தில் சிகிச்சை பெற்று பின்னர் அங்கேயே பணியாற்றி வந்த பாபு (55) மற்றும் சிவகுமார் (57) ஆகிய இருவரையும் நிஷாந்த் அடிக்கடி அவதூறாகப் பேசியதாகவும், அவர்களது குடும்பத்தினரைப் பற்றி ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாபு மற்றும் சிவகுமார் இருவரும், மையத்தின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து நிஷாந்தின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மாங்காடு போலீசார், நிஷாந்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய பாபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இதே போதை மறுவாழ்வு மையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கி சிகிச்சை பெற்று வந்த 30-க்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மையத்தின் ஆவணங்கள் முறையாக உள்ளனவா, விதிமுறைகளின்படி மையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதியில் எழுந்துள்ளது.
