LATEST NEWS
புதிய ₹1,000 நோட்டு வெளியீடா..? தஞ்சை பெரிய கோவில் கோபுரத்துடன் வைரலாகும் புகைப்படத்திற்கு மத்திய அரசு அதிரடி விளக்கம்..!!
தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பொறிக்கப்பட்ட புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்ற நிலையில், தற்போது புதுவடிவில் ரிசர்வ் வங்கி இதனை வெளியிடப் போவதாக வதந்திகள் பரவின.
தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிறத்திலான புதிய ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்களைச் சிலர் தங்களது கைகளில் வைத்திருப்பது போல சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிப் பகிர்ந்து வந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் புதிய 1,000 ரூபாய் நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு வருகிறதா என்ற பெரும் விவாதமும் குழப்பமும் ஏற்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்டுள்ள விளக்கத்தில், 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாகப் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து ரிசர்வ் வங்கியும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், பொதுமக்கள் அரசு தரப்பில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
