CINEMA
“தியேட்டரில் ஊத்திக்கிச்சு…. ஓடிடியில் பிச்சிகிச்சு…” கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் படத்திற்கு கிடைத்த மாஸ் வரவேற்பு…!!
திரையரங்குகளில் வெளியாகிப் பெரிய அளவில் கவனம் பெறாத சில திரைப்படங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியாகி அசுர வெற்றியைப் பெறுவதுண்டு. அந்த வகையில், ‘தோர்’ படப் புகழ் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் சுமார் 747 கோடி ரூபாய் செலவில் உருவான ‘கிரைம் 101’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. தியேட்டரில் போட்ட முதலைக் கூட எடுக்க முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்த இந்தப் படத்திற்கு, தற்போது இணையவாசிகள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். மிகவும் புத்திசாலித்தனமான வைரத் திருடனுக்கும், அவனைத் துரத்தும் விடாப்பிடியான துப்பறிவாளருக்கும் இடையிலான விறுவிறுப்பான மோதலே இப்படத்தின் கதைக்கருவாகும்.
இயக்குநர் பார்ட் லேட்டன் இயக்கத்தில், ஒரு பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் ஹாலே பெர்ரி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தனது இறுதித் திருட்டை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கும் திருடனுக்கும், அவனது திட்டங்களை முறியடிக்கத் துடிக்கும் போலீசாருக்கும் இடையே நடக்கும் இந்தப் பூனை-எலி ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்கிறது. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பால் IMDb தளத்தில் 6.9 மதிப்பீட்டைப் பெற்றுள்ள இத்திரைப்படம், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கான ஒரு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது.
