CINEMA
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா.. உங்க அக்கவுண்ட் சேஃப்-ஆ..? வெளியான திடுக்கிடும் தகவல்..!!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டார்க் வெப்பில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில், வங்கியின் முதற்கட்ட விசாரணையில் அவற்றில் 3,897 பதிவுகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை அடையாளம் காணக்கூடிய உண்மையான தனிப்பட்ட விவரங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி கிடைத்த இந்த எச்சரிக்கையை அடுத்து, வங்கி உடனடியாகத் தன் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சுயாதீன இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியுடன் தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தத் தரவுக் கசிவு மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் உடனடியாகத் திருடப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை என்றாலும், தனிப்பட்ட தகவல்கள் வெளியில் வருவது கவலைக்குரிய விஷயமாகும். இந்த விவரங்களை வைத்துக் கொண்டு மோசடி செய்பவர்கள் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி உங்களை இலக்காக மாற்றலாம். மேலும், பெயர் அல்லது முகவரி போன்ற உங்களுடைய சில உண்மையான விவரங்களைக் கூறி உங்களை நம்பவைத்து, அதன் பிறகு உங்கள் கணக்கைப் பாதுகாக்க வேண்டும் என்றோ அல்லது KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றோ கூறி OTP, ATM PIN, UPI PIN போன்ற இரகசியத் தகவல்களைக் கேட்க வாய்ப்புள்ளது.
எனவே, அழைப்பவர் உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சொன்னாலும் அவர்களை முழுமையாக நம்பி ஏமாந்துவிட வேண்டாம். வங்கி அதிகாரிகளாகப் பேசுபவர்களிடம் கூட ஒருபோதும் ரகசியத் தகவல்களையோ கடவுச்சொற்களையோ பகிரக் கூடாது. எஸ்பிஐயின் கூற்றுப்படி இந்தச் சம்பவத்தால் வங்கியின் வணிகத் தொடர்ச்சியில் பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனே தேசிய இணையக் குற்ற உதவி எண்ணான 1930-ஐத் தொடர்புகொள்ளலாம் அல்லது cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
