LATEST NEWS
“மக்களுக்கு ஒரு நீதி? கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு நீதியா..?” SBI வங்கியின் ரூ.1 லட்சம் கோடி ரகசியத் தள்ளுபடி அம்பலம்.. நாடாளுமன்றத்தில் வெடித்த புயல்..!!!
தேசியப் பங்குச் சந்தையில் மாபெரும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலமாகச் சுமார் ரூ.1 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ள அதிரவைக்கும் திடுக்கிடும் தகவல் தற்பொழுது வெளியாகி தேசத்தையே உலுக்கியுள்ளது. புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய வினாக்களுக்கு எஸ்பிஐ வங்கி அளித்துள்ள அதிகாரப்பூர்வப் பதிலின் மூலம் இந்த இமாலயத் தள்ளுபடி விவகாரம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2018 – 2019 ஆம் நிதியாண்டில் மட்டும் மிக அசுரத்தனமாக ஒரே வருடத்தில் ரூ.48,000 கோடி கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் புள்ளிவிவரங்கள் அடுக்கடுக்கான உண்மைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
இந்த பிரம்மாண்ட தள்ளுபடி நடவடிக்கையின் கீழ், மொத்தம் 309 பெரும் கடன் கணக்குகளில்இருந்த வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பதை எஸ்பிஐ வங்கி நிர்வாகம் ஆர்.டி.ஐ பதிலில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், மக்களின் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிய அந்த 309 பெரும் முதலாளிகள் அல்லது கடன்பெற்ற நிறுவனங்களின் விவரங்களைத் தர எஸ்பிஐ வங்கி அடியோடு மறுத்துவிட்டது. எளிய மக்கள் வாங்கும் சிறு கடன்களுக்குக் கடுமையான நெருக்கடிகளைத் தரும் வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.1 லட்சம் கோடி கடனை ரகசியமாகத் தள்ளுபடி செய்துள்ள இந்த விவகாரம் தற்பொழுது நாடாளுமன்றம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மாபெரும் விவாதப் புயலையும், மோடி அரசுக்கு எதிரான அசுரக் கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.
