CINEMA
என் சாவுக்கு அவங்கதான் காரணம்…!பிளாக் மேஜிக், ரத்த வாந்தி… ரவி மோகன் வாழ்க்கையில் விளையாடும் அந்த மர்ம நபர் யார்…!
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்துப் பிரச்சினை சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன் மிகுந்த மனவேதனையுடனும் கண்ணீருடனும் தனது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 14 வருடங்களாகத் தன் திருமண வாழ்க்கையில் தான் அனுபவித்த வலி, வேதனை மற்றும் அவமானங்களை யாரும் அனுபவித்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், தொடர்ந்து தன் மீது நடத்தப்படும் சைபர் புல்லிங் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளால் மனமுடைந்து போயிருப்பதாகக் கூறினார். இத்தனை காலம் அமைதியாக இருந்ததுதான் தன் தவறு என்றும், “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்ற பழமொழிக்கு ஏற்ப இனி தான் அமைதியாக இருக்கப் போவதில்லை என்றும், தன்னைச் சாகடிக்க நினைப்பவர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராகத் தன் தரப்பு ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்புபவர்களைக் கடுமையாகச் சாடிய ரவி மோகன், 23 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தன் மீது எந்தக் குறையும் இருந்ததில்லை என்றும், தற்போது “அழகில் மயங்கிப் போய்விட்டார்” என்று கூறுவது அற்பத்தனமானது என்றும் சாடினார். பாடகி கெனிஷா மட்டுமே தன்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என்றும், அவரையும் இங்கிருந்து விரட்டிவிட்டார்கள் என்றும் வேதனைப்பட்ட அவர், சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி அவதூறு பரப்பும் ‘மூன்று எழுத்து இட்லி நடிகை’ யார் என்று கேள்வி எழுப்பியதோடு, தன் குடும்ப விஷயத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு எச்சரித்தார். மேலும், பெற்றோர் எதிர்த்த நிலையிலும் கையை அறுத்துக் கொண்டுதான் இந்தத் திருமணம் நடந்ததாகவும், தற்போது தன்னைத் தன் குழந்தைகளைப் பார்க்கக் கூட அனுமதிக்காமல் தடுத்து வைத்துள்ளதாகவும், தன் பிள்ளைகளுக்காகவே இத்தனை ஆண்டுகள் அடிமையாக, ஒரு “கம்பெனி ஆர்டிஸ்ட்” போல வாழ்ந்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பல அதிர்ச்சித் தகவல்களை உடைத்தார்.
தான் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தையெல்லாம் அவர்களிடம் கொடுத்துவிட்டு, இன்று தான் ஒரு வாடகை வீட்டில் கஷ்டப்படுவதாகவும், தனக்கு எதிராக “பிளாக் மேஜிக்” (பில்லி சூனியம்) செய்யப்பட்டு வருவதால் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுப்பதாகவும் உருக்கமாகக் கூறினார். சமூக ஊடகங்களின் மோசமான விமர்சனங்களால் தனது நிம்மதி முற்றிலுமாகப் பறிபோய்விட்டதாகக் குறிப்பிட்ட அவர், விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்து தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் வரை புதிய படங்கள் எதிலும் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவையும் அறிவித்துள்ளார். தன்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் நேரடியாக வரத் தயார் என்று சவால் விடுத்த ரவி மோகன், இந்த இக்கட்டான சூழலில் தமக்கு ஆதரவாக இருக்கும் நல்ல உள்ளங்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கண்ணீர் மல்க விடைபெற்றார்.
