CINEMA
“சும்மா ஒன்னும் பதவி கொடுக்கல…!”சிஎம் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!அடுத்த 5 வருஷம் எப்படி இருக்கப்போகுது…!முழுக்க முழுக்க சப்போர்ட் செய்த முன்னணி நடிகை…!
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று தனது அமைச்சரவையை அதிரடியாக விரிவாக்கம் செய்துள்ளார். பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வந்த ‘கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையை நிஜமாக்கும் வகையில், தவெக அமைச்சரவையில் விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதோடு, இந்த அமைச்சரவையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் ஏழு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், நான்கு பெண் பிரதிநிதிகளும் அமைச்சர்களாகியுள்ளனர். விஜய்யின் இந்த அதிரடிப் புரட்சிக்கு இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பல ஆளுமைகளிடம் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், தவெகவைச் சேர்ந்த ராஜ்மோகன் ‘திரைப்படத் துறை’ அமைச்சராக நியமிக்கப்பட்டது கோலிவுட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்குத் தனது அடுக்கடுக்கான எதிர்ப்பைப் பதிவு செய்த நடிகர் விஷால், “திரையுலகில் எந்தவித அனுபவமும் இல்லாத ஒருவரிடம் இந்தத் துறையை ஒப்படைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதலமைச்சர் விஜய்யே இத்துறையை நேரடியாக நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் திரையுலகப் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கிடைக்கும்” என்று விமர்சித்திருந்தார். விஷாலின் இந்த கருத்துக்கு திரையுலகினர் மத்தியிலேயே எதிர்ப்புகளும் கிளம்பின.
விஷாலின் இந்த விமர்சனத்திற்கு ஏற்கனவே நடிகர்கள் அருண் விஜய் மற்றும் சிபி ராஜ் ஆகியோர் தங்களது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமான பதிலடி கொடுத்திருந்தனர். “அரசு எடுத்திருக்கும் முடிவில் யாரும் தலையிட வேண்டாம்; தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்து உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். நமது துறை சார்ந்த பிரச்சினைகளை புதிய அமைச்சர் தீர்த்து வைப்பார் என்று நம்புவோம்” என அருண் விஜய் குறிப்பிட்டிருந்தார். இந்த வரிசையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
விருதுநகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷிடம் விஷாலின் கருத்து குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் முதிர்ச்சியோடு பதிலளித்த அவர், “அரசாங்கம் ஒரு முடிவு எடுக்கிறது என்றால், அந்த முடிவில் நாம் தலையிட முடியாது. அவர்கள் கண்டிப்பாகச் சரியான முடிவைத்தான் எடுப்பார்கள். யாருக்கும் சும்மா ஒரு பதவியைக் கொடுத்துவிட மாட்டார்கள், தகுதி மற்றும் ஏதேனும் ஒரு பின்னணி இருந்தால்தான் கொடுத்திருப்பார்கள். நானும் உங்களைப் போலத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்; விஜய்யின் ஆட்சி அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
