CINEMA
ஜி.பி.முத்து மகளா இது? 10th ரிசல்ட் பார்த்துட்டு ஒரு தந்தையா அவர் சொன்ன உருக்கமான வார்த்தை…!சூழ்நிலையைத் தாண்டிய வெற்றி! வாழ்த்துகளால் ஜி.பி.முத்து மகளை நனைய வைக்கும் ரசிகர்கள்…!
சமூக வலைதளங்களில் தந்து தனித்துவமான பேச்சு பாணியால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பின்னர் பிக்பாஸ், சின்னத்திரை, வெள்ளித்திரை எனத் தன் திறமையால் முன்னேறியவர் ஜி.பிமுத்து.எப்போதும் கலகலப்பாகப் பேசி ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் அவர், தற்போது தனது மகள் குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ ஒன்று ஒட்டுமொத்த இணையவாசிகளையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மகளின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை மிகுந்த பெருமையோடும் நெகிழ்ச்சியோடும் அவர் பகிர்ந்துள்ள விதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசிய ஜி.பி.முத்து, “என்னோட மகள் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும். எவ்வளவு மார்க் எடுத்திருக்காங்கன்னு நிறைய பேர் கேட்டுட்டே இருந்தீங்க. என் மகளே அதைச் சொல்லட்டும்” என்று கூறி அருகில் இருந்த தன் மகளிடம் கேட்கிறார். அதற்கு அவரோ, தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 331 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகக் கூறுகிறார். இதைக் கேட்ட ஜி.பி.முத்து, ஒரு தந்தையாகத் தன் மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர், “இந்த மார்க் எல்லாருக்கும் பெரிய மதிப்பெண் மாதிரி தெரியாமல் இருக்கலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இது ரொம்ப பெரிய விஷயம். ஏன்னா, அவ எக்ஸாம் எழுதுற நேரத்துல நாங்க குடும்பமா பெரிய பிரச்சனையில இருந்தோம். ஊர்ல நடந்த வழிப் பிரச்சனை காரணமாக என்னையும் என் குடும்பத்தையும் தாக்கினாங்க. ஹாஸ்பிடல், போலீஸ் ஸ்டேஷன், பிரச்சனைன்னு நாங்க அலைஞ்சுக்கிட்டு இருந்தோம். அந்த இக்கட்டான மனநிலையிலயும் என் மகள் பரீட்சை எழுதி இந்த மார்க் எடுத்திருக்கா. அதனால இது எனக்கு ரொம்ப பெருமை” என்று குடும்ப சூழ்நிலையைக் கூறி கண் கலங்கினார்.
மேலும், “இது ஆரம்பம் தான். 12-ம் வகுப்புல என் மகள் இன்னும் நல்ல மார்க் எடுப்பா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்போவே அவ எடுத்திருக்கிற இந்த மார்க் எனக்குப் பெரிய சந்தோஷம்தான்” என்று மகளுக்கு ஊக்கமும் அளித்தார். டிக்டாக் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமாகி, இன்று பல முன்னணித் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக வலம் வரும் ஜி.பி.முத்து, இந்த முறை ஒரு பொறுப்பான தந்தையாகப் பேசிய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. “சூழ்நிலையைத் தாண்டி எடுத்த வெற்றி இது, மதிப்பெண் குறைவே இல்லை” என்று ரசிகர்கள் பலரும் அவரது மகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
