CINEMA
“பாய்ஸ், 7ஜி ரெயின்போ காலனி-ல நான் நடிச்சிருக்கணும்…!”அப்பா அன்னைக்கு மட்டும் ஓகே சொல்லிருந்தா…!மாமனார் சரத்குமாருடன் நிக்கோலாய் செய்யும் லூட்டி.. இணையத்தை உலுக்கும் வரலட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ…!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், அரசியல் தலைவருமான சரத்குமாரின் மகளான வரலட்சுமி, ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அவரது அசாத்திய நடனமும் நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தன. தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 எனப் பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆரம்பகாலத்தில் நடிகர் விஷாலுடனான காதல் கிசுகிசுக்கள் எனப் பல்வேறு சவால்களைச் சந்தித்த இவர், சில வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து கரம் பிடித்தார்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிக்கோலாய் சச்தேவுடனான வரலட்சுமியின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமணம் தாய்லாந்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் சரத்குமாரின் இரண்டு மனைவிகளும் கலந்துகொண்டு வாழ்த்தியது அனைவரையும் நெகிழ வைத்தது. திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிக்கோலாய், இனி தன் பெயருடன் வரலட்சுமியின் பெயரை இணைத்துக் கொள்ளப் போவதாகக் கூறி ஆச்சரியப்படுத்தினார். மேலும், மாமனார் சரத்குமாரைப் போலவே நிக்கோலாயும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் என்பதால், இருவருக்குமான ‘வேவ்லெந்த்’ மிகச்சரியாகப் பொருந்திப்போய் குடும்பத்துடன் அன்யோன்யமாக வாழ்ந்து வருகிறார்.
சரத்குமார் குடும்பத்தினருடன் நிக்கோலாய் இணைந்து கொண்டாடும் பண்டிகைகள் மற்றும் விசேஷங்களின் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சென்சேஷனல் ஆவது வழக்கம். கடந்த பொங்கல் பண்டிகையின் போது, நிக்கோலாயை ஓரமாக நிற்க வைத்து ‘சூர்யவம்சம்’ திரைப்படக் காட்சியை சரத்குமார் குடும்பத்தினர் ரீ-கிரியேட் செய்த வீடியோவும், சாயா தேவியின் பிறந்தநாளுக்கு நிக்கோலாய் பகிர்ந்த வீடியோவும் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகின. வரலட்சுமி தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கும் அவரது கணவர் நிக்கோலாய் முழு ஆதரவை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் தான் தவறவிட்ட மெகா ஹிட் திரைப்படங்கள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். “எனக்கு 17 அல்லது 18 வயது இருக்கும்போதே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதேபோல் ‘7ஜி ரெயின்போ காலனி’ மற்றும் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’ ஆகிய பட வாய்ப்புகளும் எனக்கு வந்தன. அப்போது எனக்கு வயது மிகவும் குறைவாக இருந்ததாலும், பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளாததாலும் அந்தப் படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது” என்று வரலட்சுமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்
