“ஒரே ராத்திரியில் 144 போட இது சினிமா இல்ல…!””சாதி, மதம் தெரியாமத்தான் ஓட்டு போட்டாங்க!” – மதுரையில் வையாபுரி நடத்திய அதிரடி பிரஸ் மீட்…! – cinefeeds
Connect with us

CINEMA

“ஒரே ராத்திரியில் 144 போட இது சினிமா இல்ல…!””சாதி, மதம் தெரியாமத்தான் ஓட்டு போட்டாங்க!” – மதுரையில் வையாபுரி நடத்திய அதிரடி பிரஸ் மீட்…!

Published

on

திரைப்பட நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான வையாபுரி, இன்று திங்கட்கிழமை காலை மதுரை எஸ்.எஸ். காலனி, பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள தனது நண்பர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தவெக ஆட்சி அமைந்து கடந்த இரண்டு வாரங்களாக விஜய் நினைத்தது போல சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தவெக அமைச்சரவை மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்து வரும் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் அதிரடியாகப் பதிலளித்தார்.

தமிழக அமைச்சரவையில் இரண்டு பிராமணர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைப் பற்றி ஆளாளுக்குத் தேவையில்லாமல் கருத்துப் பேசி வருவதாக வையாபுரி சாடினார். கடந்த காலங்களில் ஒரு தொகுதியில் எந்த சாதி பலம் அதிகமாக இருக்கிறதோ, அந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கே வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நிலையைத் தவெக மாற்றியமைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழக மக்கள் தவெக வேட்பாளர்களின் முகம், பெயர், சாதி, மதம் என எதையுமே பார்க்கவில்லை என்றும், முழுக்க முழுக்க விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மட்டுமே பார்த்துப் பார்த்து வாக்களித்துள்ளனர் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

Advertisement

இதற்கு உதாரணமாக ஸ்ரீரங்கம் தொகுதியைக் குறிப்பிட்ட அவர், “ஸ்ரீரங்கம் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி. அங்கு தவெக சார்பில் வென்ற ரமேஷ் எந்த சாதி, மதம் என்று யாருக்குமே தெரியாது; மக்கள் விஜய் சாருக்கு மட்டுமே வாக்களித்தனர். எனவே, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை மாற்றச் சொல்லி வற்புறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை; அவரை மாற்ற விஜய்க்கு மட்டுமே உரிமை உண்டு. ஒருவரின் பேச்சைக் கேட்டு மாற்றத் தொடங்கினால், மாற்றிக்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கும்” என்றார். மேலும், “ஒருமுறை முடிவு செய்தால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற விஜய் பட வசனத்தைக் குறிப்பிட்டு, நிஜ அரசியலிலும் விஜய் அப்படித்தான் உறுதியாகச் செயல்படுவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வையாபுரி, விஜய்க்கு யாரைக் கட்சியில் நிறுத்த வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியும் என்றும், அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளை அவர்களே கூடிப் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். “சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்றிவிட முடியாது; ஒரே ராத்திரியில் 144 தடை உத்தரவு போடுவதைப் போல எல்லாவற்றையும் உடனே மாற்றிவிட முடியாது, போகப் போகத்தான் எல்லாம் சரியாகும்” என்று எதார்த்த அரசியலைப் பேசிய அவர், முதல்வர் விஜய் தற்போது பிஸியாக இருப்பதால் நேரில் சந்திக்கவில்லை என்றும், விரைவில் அவரைச் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறி விடைபெற்றார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in