CINEMA
“அஜித்துக்கே இந்த நிலைமையா?” – தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்த ஏகே…!சன் பிக்சர்ஸ் ஆபிஸில் நடந்த அந்த ரகசிய மீட்டிங்.. அஜித்தின் ‘AK 64’ படத்திற்கு கிடைத்த க்ரீன் சிக்னல்…!விரைவில் மெகா அறிவிப்பு…!
அஜித்குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக கடந்த வருடத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதலில் வெளியான மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் ஈடுசெய்யும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஏற்கனவே ‘மார்க் ஆண்டனி’ படம் மூலம் நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த இயக்குநர் என்பதால் ஆதிக் மீது அதிக நம்பிக்கை இருந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வணிகரீதியாக நூறு கோடி ரூபாயை அள்ளியதாக அறிவிக்கப்பட்டாலும், படம் முழுக்க அஜித்தைப் பற்றிய புகழ்ச்சிகளும் ரீல்ஸ் பாணி காட்சிகளும் மட்டுமே நிறைந்திருந்ததாகக் கூறி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, அஜித் தனது கவனம் முழுவதையும் கார் ரேஸில் திருப்பினார். உலக நாடுகளுக்குச் சென்று தனது ரேஸிங் குழுவுடன் களமிறங்கி வெற்றிகளையும் குவித்தார். ஒருகட்டத்தில், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர கார் ரேஸராக மாறிவிடுவாரோ என்று ரசிகர்கள் பயந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் கமிட்டானார். ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பின் போது இயக்குநர் ஆதிக்கின் உழைப்பு அஜித்துக்குப் பிடித்துப் போனதால், மீண்டும் அவருடனேயே கூட்டணி அமைக்க ஏகே முடிவு செய்தார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது.
இருப்பினும், இப்புதிய படத்திற்காக அஜித் கேட்ட பிரமாண்ட சம்பளத்தைக் கொடுக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை என்றும், இதனால் தயாரிப்பாளர் கிடைக்காமல் அஜித் தரப்பு தடுமாறி வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சில வதந்திகள் பரவி வந்தன. அஜித்துக்கே இந்த நிலைமையா என்று ரசிகர்கள் கவலையடைந்த வேளையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், அஜித் – ஆதிக் இணையும் புதிய திரைப்படத்தைப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்துள்ளது.
சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சந்தித்துக் கதை சொல்லி, அதற்கான முன்பணத்தையும் (Advance) பெற்றுவிட்டதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமன்றி, அஜித்தை வைத்து சன் பிக்சர்ஸ் மேலும் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களான சிறுத்தை சிவாவோ அல்லது வெங்கட் பிரபுவோ இயக்க வாய்ப்புள்ளதாம். ஒருவேளை வெங்கட் பிரபு இயக்கினால், அது ரசிகர்களின் நீண்ட நாள் கனவான ‘மங்காத்தா 2’ திரைப்படமாக இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுவதால், இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
