CINEMA
“என் பலமே போயிருச்சு…!ஆட்டோகிராப்’ சேரன் வாழ்க்கையில் நடந்த பெரும் துயரம்…!பெற்ற தாயை இழந்து தவிக்கும் சேரன்…!இயக்குநர் சேரன் வீட்டில் நேர்ந்த சோகம்.. திரையுலகினர் அவசர ஓட்டம்…!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான சேரன் அவர்களின் தாயார் கமலா பாண்டியன் (வயது 84) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சற்று முன் காலமானார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாயாரை இழந்து தவிக்கும் இயக்குநர் சேரனுக்கு சினிமா பிரபலங்களும், அவரது ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சேரனுக்குச் சிறு வயது முதலே கலைத்துறையின் மீது அலாதி ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகச் சில நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னர் திரைப்படக் கனவோடு சென்னைக்குத் தடம் பதித்தார். இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகத் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய சேரன், அதனைத் தொடர்ந்து ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘மகாநதி’ போன்ற பிரமாண்ட வெற்றிப் படங்களில் பணியாற்றித் தனது திறமையை மெருகேற்றிக் கொண்டார்.
அதன் பிறகு இயக்குநராகக் களம் இறங்கிய அவர், பார்த்திபன் – மீனா நடிப்பில் ‘பாரதி கண்ணம்மா’ என்ற திரைப்படத்தை இயக்கினார். சாதியக் கட்டமைப்புக்கு எதிராகப் பேசிய இப்படம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கினாலும், வணிக ரீதியாகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ‘பொற்காலம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’ போன்ற ஆகச்சிறந்த வாழ்வியல் சார்ந்து படங்களை இயக்கி, 3 தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்ந்தார். மேலும், ‘சொல்ல மறந்த கதை’, ‘ஆட்டோகிராப்’ போன்ற படங்கள் மூலம் சிறந்த கதாநாயகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
சமீபகாலமாகப் பட வாய்ப்புகள் எதுவும் சரியாக இல்லாததால் தான் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக இயக்குநர் சேரன் தனது பேட்டிகளில் உருக்கமாகப் பேசியிருந்தார். அந்த வேதனையிலிருந்து மீள்வதற்குள், அவரது வாழ்க்கையின் ஆகப்பெரும் தூணாக விளங்கிய தாயார் கமலா பாண்டியன் தற்போது மரணமடைந்துள்ளது அவரை நிலைகுலையச் செய்துள்ளது. மறைந்த கமலா பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை (மே 26), சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள பாளையூர்பட்டியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
