LATEST NEWS
இரண்டாவது கல்யாணம் செய்ததால் வந்த வினை…! கணவன், மாமியார் உட்பட 4 பேரை துடிதுடிக்க கொன்று காரோடு எரித்த முதல் மனைவி… பதற வைக்கும் பின்னணி…!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ராம்சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாவது திருமணம் காரணமாக அவருக்கும், அவரது முதல் மனைவி சுனிதாவிற்கும் இடையே நீண்ட நாட்களாகக் கடுமையான குடும்பத் தகராறு நிலவி வந்தது.
சம்பவத்தன்று இரவு இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் முற்றியதில், ஆத்திரமடைந்த சுனிதா தனது மகன் மற்றும் மகள் சரிதாவுடன் சேர்ந்து கணவர் ராம்சிங், மாமியார் பூசிதேவி, இரண்டாவது மனைவி சூர்யக்யான் தேவி மற்றும் உறவினர் மகிமா சவுத்ரி ஆகிய நான்கு பேரையும் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் இக்கொலைகளை விபத்து போலக் காட்டுவதற்காக, நால்வரின் சடலங்களையும் தங்களது சொகுசு காரில் ஏற்றிச் சென்று, நெடுஞ்சாலையோரம் காரோடு சேர்த்துத் தீயிட்டு எரித்து நாடகமாடினர்.
கார் எரிவதைப் பார்த்த பொதுமக்களின் தகவலின் பேரில் வந்த போலீசார், வாகனத்திற்குள் கருகிய நிலையில் மூன்று உடல்களையும், அருகில் உள்ள வயலில் ஒரு உடலையும் மீட்டனர். மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் இறந்தவர்களின் உடலில் ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததும், தடயவியல் சோதனையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
முதலில் தனது மாமியாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது கார் தீப்பிடித்ததாகக் கூறி ஏமாற்ற முயன்ற சுனிதா, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். கிராம மக்கள் முன்னிலையில் துக்கம் தாளாமல் அழுவது போலவும், மயங்கி விழுவது போலவும் நடித்து வந்த முதல் மனைவி, அவரது மகன் மற்றும் மகளைக் காவல்துறையினர் தற்போது அதிரடியாகக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
