LATEST NEWS
வெறும் வாய் வார்த்தை முழக்கம் பத்தாது…! பழனி, திருச்செந்தூர் கொடூரம் இங்கேயும் நடக்கணுமா…? தவெக அமைச்சரவைக்கு பாஜக தலைவர் விடுத்த நேரடி வார்னிங்…!!
வைகாசி விசாக விழாவின் போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கடந்த கால திமுக ஆட்சியில் நிலவிய அலட்சியப் போக்கால் பழனி மற்றும் திருச்செந்தூர் போன்ற ஆன்மீகத் தலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பொதுமக்கள் உயிரிழந்த துயரச் சம்பவங்கள் தற்போதைய விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் தொடரக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசு வெறும் விளம்பர முழக்கங்களோடு நின்றுவிடாமல், இந்து ஆலயங்களில் பக்தர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும், பாதுகாப்பையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடந்த இந்த அசம்பாவிதத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாகத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.
இனியாவது விழித்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஆன்மீகத் தலங்களிலும் முறையான பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, வழிபட வரும் பொதுமக்களின் நல்வாழ்வை நிலைநாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தவெக அரசு அனைத்துத் தரப்பினருக்குமான நிர்வாகமாகச் செயல்பட வேண்டும் என்றால், ஆன்மீகப் பெருமக்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்றும் அவரது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
