LATEST NEWS
“என் பிள்ளையை காணலையே…” ரயில்வே ஸ்டேஷனில் கதறி அழுத தாய்… அடுத்த சில நிமிடங்களில்… நெகிழ்ச்சி சம்பவம்…!!
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டிப் பகுதியில் பயணம் செய்ய வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் சிக்கித் தனது ஐந்து வயதுப் பெண் குழந்தையைத் தவறவிட்டுவிட்டதாகக் கதறி அழுது தேடியுள்ளார்.
இதைப் பார்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எஃப் (RPF) பெண் காவலர் ஸ்வாதி, உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்டு இரயில்வே அரசு போலீசாருக்கு (GRP) தகவல் கொடுத்ததுடன் ஒட்டுமொத்த நடைமேடையிலும் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். காவல்துறையினரின் மிகத் துரிதமான தேடுதல் நடவடிக்கையின் காரணமாக, அதே நடைமேடையில் உள்ள குளிர்சாதன (AC) பெட்டி அருகே தனியாக நின்று அழுதுகொண்டிருந்த தர்ஷனா என்ற அந்தச் சிறுமி சில நிமிடங்களிலேயே பத்திரமாக மீட்கப்பட்டாள்.
குடும்பத்தினருடன் இரயிலில் செல்ல வந்த இடத்தில், எதிர்பாராமல் ஏற்பட்ட பயணிகள் கூட்ட நெரிசலே சிறுமி தனது பெற்றோரைப் பிரியக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. முறையான அடையாளங்களைச் சரிபார்த்துச் சிறுமியைப் பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்த போது, இரயில்வே பாதுகாப்புப் படையினரின் இந்த மின்னல் வேகச் செயல்பாட்டையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்த பயணிகள் அனைவரும் மனமாரப் பாராட்டினர்.
