LATEST NEWS
CM சார்..! இப்ப போலீஸ் உங்க கையிலதான இருக்கு.. குற்றவாளியை கண்டுபிடிங்க.. முதலமைச்சர் விஜய்யை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வறுத்தெடுத்த இயக்குநர் அமீர்..!!
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போதைய திமுக அரசு திட்டமிட்டு நாடகம் ஆடியதாக தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். தாங்கள் நாமக்கல்லில் இருந்து வரும்போதே கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி காவல்துறை தடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்றும், தங்களை வேண்டுமென்றே விபத்து நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது யார் என்றும் விஜய் கேள்வி எழுப்பினார். ஆனால், கரூர் டிஎஸ்பி பலமுறை எச்சரித்தும் தவெக நிர்வாகிகள்தான் கேட்கவில்லை என்று ஏடிஜிபி விளக்கம் அளித்த பழைய வீடியோவை பகிர்ந்து திமுக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அரசியல் பேச்சுக்கு திமுக ஆதரவாளரும் பிரபல இயக்குநருமான அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் மிகக் காரசாரமான கேள்விகளை எழுப்பிப் பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவில், “அன்று விபத்தில் பலியான 41 பேரின் குடும்பத்தினரும் இன்று உங்கள் அரசியல் கூட்டத்தில் அமர்ந்து கைதட்டி மகிழ்ந்தார்களா?” என்று ஆவேசமாகக் கேட்டுள்ளார். மேலும், கடந்த கால திமுக அரசை நோக்கி விஜய் கேள்வி எழுப்பியதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து சாடிய இயக்குநர் அமீர், “இப்போது தமிழகக் காவல்துறை உங்கள் கைகளில்தான் இருக்கிறது; அப்படி இருக்கும்போது உண்மையான குற்றவாளி யார் என்று உங்களால் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை?” என முதலமைச்சர் விஜய்யை நோக்கி அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை ஏமாற்றும் இந்த கோயபல்ஸ் தத்துவ அரசியல் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரப் போகிறது என்று தெரியவில்லை என அவர் பதிவிட்டுள்ளார்.
