LATEST NEWS
பரபரப்பு..! காவிரி நீர் கேட்டு கர்நாடகாவுக்கு முதல்வர் விஜய் வந்தால்… விமான நிலையத்தில் வைத்தே… வாட்டாள் நாகராஜ் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழக முதலமைச்சர் விஜய் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் கர்நாடகா வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், அம்மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாகக் பெங்களூரில் நடைபெற்ற கன்னட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, கன்னட சலுவாலி வாட்டாள் பக்ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழக முதலமைச்சருக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு இனி காவிரி நீர் தேவையில்லை என்று கூறிவிட்டு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு வந்தால் அவரைத் தாங்கள் வரவேற்போம் என்றும், மாறாகத் தண்ணீர் கேட்கும் கோரிக்கையுடன் வந்தால் பெங்களூரு விமான நிலையத்திலேயே அவரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடக் கோரும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவைக் கண்டித்தும், தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தியும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி கர்நாடகா தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் கன்னட அமைப்புகள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.
முன்னதாக, காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்து இரு மாநிலங்களும் சுமுகமாகப் பேசித் தீர்வு காணும் வகையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காகக் கர்நாடக அரசு சார்பில் அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில், அங்குள்ள கன்னட அமைப்புகள் இதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருவது இரு மாநில எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
