LATEST NEWS
“7 பெட்ரூம்.. ஆனா செங்கல், சிமெண்ட் இல்லை..!” 8000 பாட்டில்களை வைத்து தாய்-மகள் செய்த மேஜிக்.. சூரிய ஒளி பட்டதும் சுவர்கள் ஜொலிக்கும் ரகசியம்.. இணையத்தில் வைரலாகும் விசித்திர சம்பவம்..!!
இட்டமராக்கா தீவில், எட்னா டான்டாஸ் மற்றும் அவரது மகள் மரியா கேப்ரெய்லி டான்டாஸ் ஆகியோர் கடற்கரையில் வீணாகக் குவிந்து கிடந்த கழிவுப் பொருட்களைக் கொண்டு ஒரு மாபெரும் சொகுசு வீட்டை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இவர்கள் கடற்கரைகளில் வீசப்பட்ட கண்ணாடிப் பாட்டில்களைச் சேகரிக்கத் தொடங்கினர். சுமார் இரண்டு ஆண்டுகாலத் தீவிர உழைப்பில், மரப்பொருட்கள், பழைய மரப் பலகைகள் மற்றும் பற்பசைக் குழாய்கள் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு, ஏழு அறைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட வீட்டை இவர்கள் சுயமாகக் கட்டியெழுப்பியுள்ளனர்.
‘சால்ட் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் இந்த விசித்திரமான இல்லத்தின் சுவர்களைக் கட்டுவதற்கு மட்டுமே சுமார் 8,000 கண்ணாடிப் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகாலை நேரத்தில் சூரிய ஒளி இந்தப் பாட்டில்கள் வழியாக ஊடுருவி வரும்போது, வீட்டின் உட்புறச் சுவர்கள் அனைத்தும் வண்ணமயமாக ஒளிரும் வகையில் இது கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக-சுற்றுச்சூழல் கல்வியாளரான எட்னா மற்றும் ஆடைத் துறையில் பணியாற்றும் அவரது மகள் மரியா ஆகிய இருவரும், கட்டுமானத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலினப் பாகுபாட்டை உடைக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதுடன், தங்களது வீட்டை தற்போது சுற்றுச்சூழல் கட்டுமானப் பயிற்சிகள் வழங்கும் ஒரு விழிப்புணர்வு மையமாகவும் மாற்றிப் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
