CRIME
“வெறும் ஐ போன் சண்டை இல்லை..!” மருத்துவராகக் கனவு கண்ட 18 வயது இளைஞனின் வாழ்க்கையை முடித்த ‘அந்த’ ஒரு பிரஷர்.. போலீஸ் விசாரணையில் வெடித்த அசல் உண்மை..!!
பத்தாம் வகுப்பில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று, எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்ற பெரும் கனவோடு இருந்த 18-19 வயதுடைய குணால் சந்த்வாடே என்ற இளைஞனின் மரணம், தற்போது ஊடகங்களில் வெறும் ‘ஐபோன்’ ஆசைக்காக நடந்த ஒன்றாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், அவன் ஐபோன் வாங்கிக் கேட்டு அடம் பிடித்ததால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது எனச் செய்திகள் பரவின. ஆனால், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அவனிடம் ஏற்கனவே ஐபோன் இருந்தது என்பதும், அதன் இஎம்ஐ மற்றும் பணப் பிரச்சனைகள் காரணமாகவே இந்தத் தகராறு வெடித்தது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, இந்தச் சோகம் வெறும் ஒரு மொபைல் போனைப் பற்றியது அல்ல. மாறாக, அந்தப் பிஞ்சு உள்ளம் தனியாகச் சுமந்து வந்த கடுமையான மன அழுத்தத்தைப் பற்றியதாகும்.
“எத்தனை மதிப்பெண்கள் வாங்கினாய்?” என்று பிள்ளைகளிடம் கேட்கும் நாம், “நீ எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறாய்?” என்று என்றாவது கேட்டுள்ளோமா என்ற உன்னதமான கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்புகிறது. பல நேரங்களில் குழந்தைகளுக்குப் பணமோ அல்லது ஆடம்பரப் பொருட்களோ தேவையில்லை; “பிரச்சனை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை, முதலில் வீட்டிற்கு வா.. நாம் அனைவரும் சேர்ந்து அதனைச் சரி செய்து கொள்ளலாம்” என்ற பெற்றோரின் ஒரு சிறிய ஆறுதல் வார்த்தையும், நம்பிக்கையும்தான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடும் இந்தச் சமூகத்தில், பிள்ளைகளின் மனப்போராட்டங்களைத் தனியாகச் சுமக்க விடாமல், அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் அன்பான சூழலை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
