CRIME
ஐயோ கொடுமையே..! பெத்தவங்களையே கோடாரியால் வெட்டிச் சாக்குமூட்டையில் கட்டிய மகன்… சத்தீஸ்கரில் அரங்கேறிய கொடூரம்..!!
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தின் தௌர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சப்டா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது பெற்றோரைக் கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஹீராதர் யாதவ் (55) மற்றும் அவரது மனைவி குலாபி யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொலைக்குப் பிறகு, குற்றவாளி உடல்களை தனித்தனி சாக்குமூட்டைகளில் கட்டி, வீட்டின் அறைக்குள் பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றான். ஆகஸ்ட் 16 அன்று நடந்த இந்த இரட்டைக் கொலை வழக்கில், தப்பி ஓடிய மூத்த மகன் ஜது யாதவ் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதியினர் தங்களது மூத்த மகனுடன் பழைய வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களின் இளைய மகன் மோகன் யாதவ் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். ஆகஸ்ட் 17 அன்று காலை பால் வாங்குவதற்காக மோகன் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றபோது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரத்த வெள்ளத்தில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோரின் உடல்கள் இருந்தன. மேலும் மூத்த சகோதரன் காணாமல் போயிருந்ததால், இதுகுறித்து மோகன் உடனடியாகத் தௌர்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி, 4-வது நாளில் தலைமறைவாக இருந்த மூத்த மகன் ஜது யாதவைக் கைது செய்தனர். போலிஸாரின் விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோரை கோடாரியால் வெட்டிக் கொன்றதாகவும், ஆதாரங்களை மறைப்பதற்காகக் கொலை நடந்த இடத்தை மாட்டுச் சாணத்தால் மெழுகிவிட்டு உடல்களைச் சாக்கில் கட்டிப் பூட்டிச் சென்றதாகவும் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக BNS பிரிவுகள் 103(1) மற்றும் 238-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த போலிஸார், வெள்ளிக்கிழமை அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
