CRIME
ஐயோ கடவுளே..! ஜாமீனில் வந்த சில வாரங்களிலேயே ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பனே செய்த காரியம்.. நடுரோட்டில் வெடித்த முக்கோணக் காதல் போர்.. நாக்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 27 வயதான கவுரவ் பங்கஜ் ரக்டே என்ற ரவுடி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த சில வாரங்களிலேயே அவரது சொந்த நண்பராலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை, கொள்ளை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ள ரக்டேவுக்கும், அதே குற்றப் பின்னணி கொண்ட அவரது நண்பரான கவுரவ் ராம்பாவ் ராவுத் என்பவருக்கும் இடையே ஒரு பெண்ணை மையமாகக் கொண்ட முக்கோணக் காதல் விவகாரம் இருந்துள்ளது. ரக்டே சிறையில் இருந்த காலகட்டத்தில், அவர் காதலித்து வந்த மும்பையைச் சேர்ந்த ‘ராணி’ என்ற பெண்ணுடன் ராவுத்துக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் குற்றச் செயல்களைக் கைவிட்டு, புதிய தொழில் தொடங்கி திருந்திய வாழ்க்கை வாழத் தொடங்கியதை அறிந்து ஆத்திரமடைந்த ரக்டே, சம்பவத்தன்று ராவுத்தின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலால் பயந்து தப்பியோட முயன்ற ராவுத்தை ரக்டே துரத்திச் சென்றபோது, நரேந்திர நகர் பகுதியிலுள்ள சுந்தர்பன் ஓடை பாலத்தின் அருகே இருவருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ராவுத்தின் கூட்டாளி அபிஷேக் வாஸ்னிக் என்பவருடன் சேர்ந்து, நிலைதடுமாறி விழுந்த ரக்டேவின் கத்தியைப் பறித்து அவரையே இருவரும் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் நடந்த உடனே, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் தப்பியோடிய கொலையாளி ராவுத்தை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது பெல்டரோடி காவல் நிலைய போலீஸார் இந்த முக்கோணக் காதல் கொலை வழக்கு குறித்து இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
