CRIME
திடீர் திருப்பம்..! “ஐபோனுக்காக தற்கொலை செய்யல” மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 18 வயது இளைஞர்… காவல்துறையினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்..!!
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவத்யா மலைப்பகுதியில், 18 வயது இளைஞன் மற்றும் அவனது பெற்றோர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான குணால் சாந்த்வடே என்ற இளைஞன் மலையின் விளிம்பிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, அவனைக் காப்பாற்ற தந்தை முரளிதர் சாந்த்வடே ஓடிச் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக தந்தை, மகன் இருவருமே மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்; கண் முன்னே கணவனும் மகனும் விழுந்து இறந்ததைக் கண்ட தாய் சங்கீதா சாந்த்வடேவும் அதே இடத்திலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, குணால் ஐபோன் வாங்குவதற்காக அடம்பிடித்ததாகவும், அதற்கான இஎம்ஐ கட்டுவது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவன் தற்கொலைக்கு முயன்றான் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாகப் பரவின. ஆனால், இந்த ‘ஐபோன் கனெக்ஷன்’ வதந்திகள் குறித்து காவல்துறை தற்போது விளக்கமளித்துள்ளது. குணால் ஐபோன் வாங்குவதற்காகத்தான் தற்கொலை செய்ய முயன்றான் என்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் தற்போதைய முதற்கட்ட விசாரணையில் கிடைக்கவில்லை என்று போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சம்பாஜிநகர் காவல்துறை துணை ஆணையர் ரத்னாகர் நவாவ்லே இதுகுறித்து தெரிவிக்கையில், குணால் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் இருந்தது உண்மைதான் என்றாலும், அவனது இந்த முடிவுக்கு ஐபோன் தான் காரணமா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை என்று கூறியுள்ளார். சம்பவம் நடந்து இன்னும் 24 மணி நேரம் கூட முழுமையாக ஆகாததால், முழு விசாரணைக்குப் பிறகே உண்மை வெளிவரும் என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
