LATEST NEWS
நான் கேட்ட கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லவே இல்லை.. திராணி இல்லையா..?!” அமைச்சர் நிர்மல் குமாரை ஓப்பனாக வறுத்தெடுத்த செந்தில் பாலாஜி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக அரசு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துவதை விட, எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குகளைப் பதிவு செய்வதில்தான் ஒட்டுமொத்தக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். தவெக அரசு தங்களுக்கு எதிராக ஒன்றுமல்ல, பத்து வழக்குகளைப் போட்டாலும் அதனைச் சட்டப்பூர்வமாகச் சந்திப்பதற்கும், நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கும் தங்களது கட்சி முழுமையாகத் தயாராக இருக்கிறது என்றும் அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
மின்சாரத் துறையில் காணாமல் போன ஹார்ட் டிஸ்க்குகள் விவகாரத்தைக் கையில் எடுத்துப் பேசிய செந்தில் பாலாஜி, தான் எழுப்பிய முக்கியக் கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடைசி வரை பதில் சொல்லவே இல்லை என்று வெளிப்படையாகப் பொரிந்து தள்ளினார். “துறையில் இருந்து 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போய்விட்டதாகக் கூறிவிட்டு, பின்னர் 38 ஹார்ட் டிஸ்க்குகளைக் கண்டுபிடித்துள்ளோம் என அமைச்சர் கூறுகிறார்; அப்படியென்றால் மீதமுள்ள அந்த 20 ஹார்ட் டிஸ்க்குகள் எங்கிருந்து வந்தன?” என்ற தனது நேரடிக் கேள்விக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்கத் துப்பில்லாமல் குதர்க்கமான வார்த்தைகளைப் பேசி அவையை நடத்துகிறார்கள் என்று சாடினார். தவெக அரசு 100 நாட்களைக் கடந்தும் மக்களுக்கு எந்தவிதப் பயனும் தராத ஒரு முடங்கிய அரசாகவே நீடிக்கிறது என்றும், சட்டமன்றத்தில் திறமையின்றிச் செயல்படும் இவர்களுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
