LATEST NEWS
“போலீஸை வச்சு ஜெயில்ல தள்ளிடுவேன்” குடும்ப உறவினருக்கு மிரட்டல் விடுத்த த.வெ.க MLA சபரி ஐயங்கரன்.. லீக்கான ஆடியோவால் பெரும் பரபரப்பு…!!
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் நிர்வாகி சபரி ஐயங்கரன், தனது உறவினரைத் தொலைபேசியில் மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் கலப்புத் திருமணம் மற்றும் குடும்பப் பின்னணி சார்ந்த அரசியல் வரலாற்றுப் பதிவுகளை அந்த உறவினர் பதிவிட்டதே இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. குடும்ப விவகாரங்கள் மற்றும் திராவிட இயக்க வரலாற்றுத் தகவல்களைப் பொதுவெளியில் பகிர்ந்தது தொடர்பாக சபரி ஐயங்கரன் போனில் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அந்த உறவினர் தன் தரப்பு விளக்கத்தை அளித்ததாகவும் தெரிகிறது.
இருப்பினும், இந்த உரையாடல் காரசாரமான வாக்குவாதமாக மாறியதை அடுத்து, குறிப்பிட்ட பதிவை உடனடியாக நீக்காவிட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க நேரிடும் என சபரி ஐயங்கரன் எச்சரித்ததாக அந்த ஆடியோவில் பேசப்படுகிறது.
தொடர்ந்து கட்சி மாறுதல் மற்றும் குடும்ப புகைப்படங்கள் குறித்தும் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இறுதியில், குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு அந்தப் பதிவை நீக்குவதாக அந்த உறவினர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தூய்மையான அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்துள்ள கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தன் குடும்ப உறவினரையே காவல்துறையைக் கொண்டு மிரட்டும் பாணியில் பேசியதாகக் கூறப்படும் இந்த ஆடியோ இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. இருப்பினும், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்தோ அல்லது சபரி ஐயங்கரனின் பேச்சு குறித்தோ அக்கட்சியின் தலைமையோ அல்லது அவர் தரப்போ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
