LATEST NEWS
தவெகவில் அடுத்தகட்ட மோதல்..! துணை முதல்வர் நாற்காலிக்கு அடிபோடும் புஸ்ஸி ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா..? திருச்சி முழக்கத்தால் சூடாகும் தமிழக அரசியல்..!!
தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்களுக்குக் களமாக அமைந்த திருச்சி மண்ணில், ‘துணை முதல்வர் அண்ணன் ஆனந்த் வாழ்க’ என்ற முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் பயணித்து வரும் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் தலைமை நிலையச் செயலாளராகவும் முதன்மை நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் தொண்டர்களை ஒருங்கிணைப்பதிலும் முக்கியப் பங்காற்றி வரும் இவருக்கு, எதிர்காலத்தில் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்பட்சத்தில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் திருச்சி கூட்டங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.
அதேவேளையில், கட்சியின் முக்கிய முடிவுகளிலும் வியூக அமைப்புகளிலும் தீவிரமாகப் பங்காற்றி வரும் ஆதவ் அர்ஜுனாவின் பெயரும் துணை முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக உட்கட்சி வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன. முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இவரது அரசியல் நகர்வுகளும், கட்சி நிர்வாகிகளிடையே இவருக்கு இருக்கும் ஆதரவும் தவெகவின் அடுத்தகட்ட தலைமையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. புஸ்ஸி ஆனந்துக்கு ஒருபுறம் ஆதரவு முழக்கங்கள் வலுத்து வரும் நிலையில், மறுபுறம் ஆதவ் அர்ஜுனாவின் பெயரும் அடிபடுவது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே இருவேறு கருத்துக்களை உருவாகியுள்ளது.
துணை முதலமைச்சர் பதவியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த உட்கட்சிப் போட்டியும், ஆதரவாளர்களின் பரஸ்பர முழக்கங்களும் தவெகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நகரும் தவெகவில், அதிகாரப் பகிர்வு மற்றும் முக்கியப் பதவிகள் குறித்த இந்த தொடக்கக்கால விவாதங்கள் கட்சித் தலைவர் விஜய்யின் வரவிருக்கும் முடிவுகள் மீதான கவனத்தை ஈர்த்துள்ளன. தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கட்சித் தலைமை எவ்வாறு உட்கட்சிச் சமநிலையைப் பேணப் போகிறது என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
