LATEST NEWS
“சட்டசபையை சினிமா செட்-னு நெனச்சிட்டீங்களா..?” பஞ்ச் டயலாக் பேசுபவர்களை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் வெடித்த அனல் பறக்கும் பேச்சு..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அதிரடி உட்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய அரசியல் வியூகங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் விரிவாக உரையாற்றினார். தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, இது நிரந்தரமானது அல்ல என்றும், கழகத்தின் எதிர்காலத்தைத் திட்டமிட நமக்குக் கிடைத்துள்ள ஒரு நல்வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். கள ஆய்வுக் குழு மற்றும் தங்கத் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை தரும் வகையில், கட்சியின் பல்வேறு மட்டத்திலான பொறுப்புகளுக்கு அதிரடி வயது வரம்பும், பதவிக்காலமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தங்கள் தரப்பில் இருந்த தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டாலின், தற்போதைய முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். மக்கள் நலனுக்காக உழைக்காமல், எந்தவொரு கொள்கையோ அல்லது நிர்வாகக் கட்டமைப்போ இல்லாமல் தற்போதைய ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதாகச் சாடிய அவர், தற்போதைய முதலமைச்சர் திமுக அரசின் முந்தைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவதிலேயே பிசியாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், சட்டமன்றத்தைச் சினிமா செட் போல நினைத்துப் பட்டிமன்றப் பாணியில் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பதாக மறைமுகமாகத் தவெக மற்றும் திமுக-வுக்கு இடையேயான தற்போதைய அரசியல் மோதல்கள் குறித்து விமர்சித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளைக் கடந்தும் வலிமையோடு இருப்பதற்கு அதன் கட்டமைப்புதான் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ‘கம்பேக்’ கொடுப்பதில் திமுக எப்போதும் ஸ்பெஷலிஸ்ட் என்று முழங்கினார். சுய பரிசோதனை மற்றும் உட்கட்சித் தேர்தல்கள் மூலம் தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இந்த அதிரடி மாறுதல்கள் சிலருக்குக் கசப்பாக இருந்தாலும் அடுத்த நூறாண்டுகளுக்குக் கட்சி உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்யும் என்றும் உறுதியளித்தார். தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் திமுக தொடர்ந்து முன்னின்று போராடும் என்று கூறி, புதிய உறுப்பினர் சேர்க்கையை நேர்மையான முறையில் தொடங்க நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
