LATEST NEWS
“1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கொடுங்க” உயர்நீதிமன்றத்தை நாடிய கி.வீரமணி.. பெரும் பரபரப்பு..!!
தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளருக்கு எதிராக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே ஆயிரம் மான நஷ்டஈடு கேட்டு உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘பாரதத்தின் சிறந்த ஜனநாயகத்துக்கான தொகுதி மறுவரையறை மற்றும் மாநிலங்கள் சீரமைப்பு’ (Delimitation and Reorganisation of States for a Better Democracy in Bharat) என்ற ஆங்கிலப் புத்தகத்தில், “பிராமணர்களை ஒழிக்க வேண்டும்” என பெரியார் கூறியதாக தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் செயலாளராகவும் இருக்கும் கி. வீரமணி, தங்களால் 1981 இல் வெளியிடப்பட்ட பெரியாரின் அதிகாரப்பூர்வ பேச்சுகள் மற்றும் எழுத்துகளின் தொகுப்பில் இத்தகைய கருத்துகள் எதுவும் இடம் பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். பெரியாரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும், தற்போதைய மத்திய பாஜக அரசின் அரசியல் நலன்களுக்குச் சாதகமாகவும் திட்டமிட்டு இந்த அவதூறான கருத்துகள் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தி.க. தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனவே, இந்த அவதூறு கருத்துகளை நீக்க வேண்டும் என்றும், புத்தகத்தின் வெளியீடு மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சர்ச்சைக்குரிய புத்தகத்தின் எழுத்தாளர்களான கவுதம் ஆர். தேசிராஜு, தீக்ஷித் பட்டாச்சார்யா மற்றும் அதன் பதிப்பக நிறுவனமான ‘புளூ ஒன் இங்க் ஆகியவை இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 9, 2026 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
