CRIME
“3 நிமிஷம் போதும் பாஸ்… எந்த பைக் பூட்டா இருந்தாலும் க்ளோஸ்..” B.Sc படிச்ச ஸ்கூல் டீச்சர் செஞ்ச பகீர் வேலை..! சிசிடிவி ஆதாரத்தால் அம்பலமான மெகா திருட்டு..!!
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டக் காவல் துறையும் சைபர் செல்லும் இணைந்து நடத்திய சோதனையில், இருசக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 61 திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளனர். கண்ட்வாவில் தொடர்ந்து நடைபெற்ற வாகனத் திருட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து, அப்பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தொழில்நுட்ப ஆதாரங்களையும் ஆராய்ந்தபோது, அனைத்து திருட்டுகளும் ஒரே பாணியில் நடந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பின் முடிவில், சந்தேக நபர்களான விஷால் மற்றும் பப்ளு ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தத் திருட்டுக்கும்பலின் முதன்மை சூத்திரதாரியான விஷால் என்பவன் B.Sc பட்டதாரி என்றும், முன்பு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்தவொரு இருசக்கர வாகனத்தின் பூட்டையும் வெறும் 3 நிமிடங்களில் உடைத்துத் திருடுவதில் அவன் வல்லவனாக இருந்துள்ளான். விஷால் மீது மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவனது கூட்டாளியான பப்ளு மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வாகனங்களைத் திருடியவுடன் உடனடியாக விற்காமல், காடுகள் மற்றும் ஆள்நடமாட்டமில்லாத பாழடைந்த இடங்களில் மறைத்து வைப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சேர்ந்த பிறகு, தேவைகளுக்கேற்ப சில பைக்குகளை அப்படியே முழுமையாகவும், சிலவற்றை பாகங்களைப் பிரித்தோ அல்லது பழைய இரும்புக்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களது திருட்டு நெட்வொர்க் மத்தியப் பிரதேசத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளுக்குப் பரவியிருந்த நிலையில், கைப்பற்றப்பட்ட 61 பைக்குகளில் 7 பைக்குகள் கண்ட்வாவைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.
