LATEST NEWS
அன்னைக்கு பிசினஸ் கிளாஸ் ஸ்கிரீனை எட்டிப்பார்த்த பையன்.. இன்னைக்கு அங்கேயே உட்கார்ந்து அழுகுறான்.. தொழிலதிபர் ஆஷ் லம்பாவின் நெகிழ்ச்சியான வைரல் வீடியோ..!!
பல ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு தனது சிறுவயதுக் கனவு நனவானதால், விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவில் வசித்து வரும் ஆஷ் லம்பா என்ற அந்தத் தொழிலதிபர், தான் பிசினஸ் கிளாஸில் பயணித்த போது எடுத்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆனந்தக் கண்ணீர் அவரது கடந்த காலப் போராட்டங்களையும், விடாமுயற்சியையும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஆஷ் லம்பா, பள்ளிப் பருவத்தில் தனது பணக்கார நண்பர்கள் விலையுயர்ந்த கடிகாரங்கள், போன்களை வைத்திருப்பதையும், லண்டனுக்குச் சுற்றுலா செல்வதையும் பார்த்துத் தானும் வாழ்க்கையில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுவயதில் சாதாரண எகானமி கிளாஸில் பயணிக்கும் போது, பிசினஸ் கிளாஸ் எப்படி இருக்கும் என்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவே அடிக்கடி கழிவறைக்குச் செல்வது போலப் பொய் கூறி, அங்குள்ள திரையை விலக்கிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DafgRDpxLRF/?utm_source=ig_web_button_share_sheet
தற்பொழுது பிசினஸ் கிளாஸில் அமர்ந்திருக்கும் போது, அன்று தனக்குத்தானே சவால் விட்டுக் கொண்டு, எதற்கும் துணிந்து நின்று போராடிய அந்தச் சிறுவனைத் தான் கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்ந்ததாக அவர் உருக்கமாக எழுதியுள்ளார். “அன்று என் உள்ளே இருந்த அந்தச் சிறுவன் தான் இன்று அழுது கொண்டிருக்கிறான்; அவன் ஒருபோதும் தன் நம்பிக்கையைக் கைவிடவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த இன்ஸ்பிரேஷனல் வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “உங்களைக் குறித்துப் பெருமையாக இருக்கிறது” என்றும், விடாமுயற்சி இருந்தால் எந்தக் கனவும் நனவாகும் என்றும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
