CINEMA
“மும்பையில் நேற்றிரவு நேர்ந்த சோகம்…””அச்சு அசலாக லதா மங்கேஷ்கர் குரல்! ரசிகர்கள் ஏமாந்த அந்தப் பாடல்கள்… பாடகி சுமனைக் கொண்டாடும் நெட்டிசன்கள்!…”
இந்தி மற்றும் மராத்தி திரையிசை உலகில் முத்திரை பதித்த பழம்பெரும் பாடகி சுமன் கல்யாண்பூர் (89), உடல்நலக் குறைவு காரணமாக மும்பை லோகண்ட்வாலாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவரது மறைவு, ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் ஆழ்த்தியுள்ளது. 1960-களில் இந்திய திரை இசை உலகம் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோரின் ஆதிக்கத்தில் இருந்த காலக்கட்டத்திலும், தனது வசீகரமான மற்றும் இனிமையான குரலால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து சாதனை படைத்தவர் சுமன் கல்யாண்பூர்.
சுமனின் குரல் வளம் அச்சு அசலாக லதா மங்கேஷ்கரின் குரலை ஒத்திருந்ததால், ஆரம்ப காலத்தில் அவர் பாடிய பல பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியதாகவே ரசிகர்கள் நினைத்தனர். அந்தச் சமயத்தில் லதா மங்கேஷ்கர் ஒரு பாடலுக்கு 100 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு உச்சத்தில் இருந்ததாலும், அவரது கால்ஷீட் கிடைக்காத நேரங்களிலும் பல முன்னணி இசையமைப்பாளர்கள் சுமன் கல்யாண்பூரையே நாடினர். குறிப்பாக, இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மனுக்கும் லதா மங்கேஷ்கருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தின் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Na Tum Humein Jaano’ என்ற பாடலை சுமன் கல்யாண்பூரை பாட வைத்தே பர்மன் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பிறந்து வளர்ந்த சுமன், சிறுவயதில் கடுமையான குடும்பக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வீட்டின் உள்ளேயே தங்கியிருந்தபோது பாடல்களையே தனது உலகமாக மாற்றிக் கொண்டார். மராத்தி படத்தின் மூலம் திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், பிற்காலத்தில் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளர் உஷா கன்னாவின் இசையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். லதா மங்கேஷ்கர் என்ற மாபெரும் ஆளுமையின் நிழலில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், தனது அசாத்திய திறமையால் தனி முத்திரை பதித்த சுமன் கல்யாண்பூர் 1986-ஆம் ஆண்டுடன் இசைத்துறையிலிருந்து விலகினார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
