CINEMA
“அன்னைக்கு அது தப்புனு தெரியாம போச்சு…”குமரிமுத்துவை பார்த்து கைதட்டி சிரிச்சேன்…யாரையும் இனி அப்படி சொல்ல மாட்டேன்… பரிமளா&கோ’ படவிழாவில் ஊர்வசி …குமரிமுத்துவுக்காக எடுத்த கண்ணீர் சபதம்…!
பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. தற்போது குணச்சித்திர வேடங்களிலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், சாண்டி மாஸ்டர் ஆகியோருடன் இணைந்து ‘பரிமளா&கோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் ரிலீஸாகவிருக்கும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து குறித்து ஊர்வசி பகிர்ந்துகொண்ட விஷயம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலங்கச் செய்துள்ளது.
அந்தப் பேட்டியில், முந்தைய காலங்களில் சினிமாவில் உருவகேலி (Body Shaming) என்பது எவ்வளவு சாதாரணமாக இருந்தது என்பதை ஊர்வசி வேதனையுடன் விவரித்தார். “முன்பெல்லாம் உருவகேலி செய்வது தவறு என்றே எனக்குத் தெரியாது, மற்றவர்கள் கேலி செய்யும்போது நானும் சேர்ந்து சிரித்திருக்கிறேன். ஒரு திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் குமரிமுத்து அண்ணனைப் போலவே கண்களை ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு என்னை நடிக்கச் சொன்னார்கள். நானும் அப்படியே செய்ய, ஷாட் முடிந்ததும் அங்கிருந்த அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள். அப்போது அது எனக்கு ஒரு நகைச்சுவையாக மட்டுமே தெரிந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதன் பிறகு ஒருமுறை குமரிமுத்துவை ஊர்வசி நேர்காணல் செய்தபோதுதான் அந்தப் பார்வையை மாற்றிய நிஜமான வலி அவருக்குப் புரிந்துள்ளது. “போலீஸ் ஆக வேண்டும், டிரைவிங் பழக வேண்டும் என்ற தனது இளம் வயது ஆசைகள் அனைத்தும் இந்த ‘ஒன்னரை கண்’ காரணத்தினாலேயே நிராகரிக்கப்பட்டதாகக் குமரிமுத்து அண்ணன் கூறினார். பேட்டியின் இடையே, ‘நீ கூட ஒரு படத்துல என்னை மாதிரி கண் வச்சு நடிச்சியே’ என்று அவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே வெளியே ஓடிப்போய் கதறி அழுதுவிட்டேன். ‘இந்தக் கண்கள்தான் இப்போது எனக்குச் சோறு போடுகிறது’ என்று அவர் சொன்ன அந்த வார்த்தைக்குப் பிறகு, வாழ்க்கையில் யாரையும் எப்போதும் உருவகேலி செய்யக் கூடாது என்று உறுதியான முடிவெடுத்தேன்” என ஊர்வசி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
