பியூட்டி பார்லர் பெண்ணை வழிமறித்த மர்ம கும்பல்…ஜி-பே (G-Pay) மிரட்டல்.. அடுத்தடுத்து சிக்கிய 2 இளம்பெண்கள்… திருவண்ணாமலையை உலுக்கிய அந்த 11 பேர் கும்பல்…அலறும் ஆன்மீக பூமி…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பியூட்டி பார்லர் பெண்ணை வழிமறித்த மர்ம கும்பல்…ஜி-பே (G-Pay) மிரட்டல்.. அடுத்தடுத்து சிக்கிய 2 இளம்பெண்கள்… திருவண்ணாமலையை உலுக்கிய அந்த 11 பேர் கும்பல்…அலறும் ஆன்மீக பூமி…!

Published

on

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்த இரு வேறு பெண்களை, மர்ம கும்பல் ஒன்று காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து, நகைகளைப் பறித்ததோடு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், கடந்த 30-ஆம் தேதி இரவு கிரிவலத்தை முடித்துவிட்டுத் தன் ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பெரியகோளாப்பாடி அருகே ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், இருவரையும் மிரட்டிக் காட்டுக்குள் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து, 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளது. மேலும், இருவரையும் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த அக்கும்பல், அடுத்த நாள் ரூ.1 லட்சம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி ‘ஜி-பே’ (G-Pay) மூலம் ₹4,000 பறித்துள்ளது.

இதேபோன்று, கடந்த 31-ஆம் தேதி இரவு திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயது பியூட்டி பார்லர் பெண் ஊழியர் ஒருவர் கிரிவலம் சென்றுள்ளார். கால் வலி காரணமாகத் தன் ஆண் நண்பரை உதவிக்கு அழைக்க, இருவரும் அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மற்றொரு மர்ம கும்பல், இருவரையும் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து சித்ரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளது. மேலும், அப்பெண்ணின் 2 கிராம் தங்கக் கம்மலைப் பறித்துக்கொண்டு, மறுநாள் ‘ஜி-பே’ மூலம் பணம் அனுப்ப வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட இரு தரப்பினரும் தைரியமாகப் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, இந்த அடுத்தடுத்த கொடூரச் சம்பவங்கள் தொடர்பாகப் போலீசார் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர்.

Advertisement

ஆன்மீக நகரையே உலுக்கிய இச்சம்பவங்கள் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இக்கொடூரச் செயல்களில் ஈடுபட்ட ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெரியபாலியப்பட்டு ஆகாஷ், அஸ்வநாதகரணை அப்பு, அரிகரன், சர்மா, சேந்தமங்கலம் அருண்குமார், திருவண்ணாமலை சிவகணேசன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் உள்பட மொத்தம் 8 பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற 3 குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். பௌர்ணமி கிரிவலத்திற்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த இந்த விபரீதம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in