LATEST NEWS
“தமிழ்நாட்டை மீண்டும் நாசமாக்க விடமாட்டோம்…” தமிழக அரசிடம் அனுமதி கோரும் வேதாந்தா குழுமம்…. முதலமைச்சர் விஜய்க்கு வைகோ விடுத்த அவசர வேண்டுகோள்…!!
தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஒரு தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தனக்குப் பெருத்த அதிர்ச்சியை அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயற்கைக்கும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் நச்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி, தங்கள் கட்சி மற்றும் வணிகர் சங்கங்களின் ஆதரவோடு அப்பகுதி மக்கள் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தினார்கள் என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஆனால், அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டு, போராடிய அப்பாவி மக்கள் 13 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரத்தை சுட்டிக்காட்டிய அவர், இறுதியில் நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அந்த ஆலை நிரந்தரமாக முடப்பட்டது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்தியாவில் தாமிரத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளதைச் சாடிய வைகோ, அத்தகைய ஆலை தேவைப்பட்டால் அதை அவரது சொந்த மாநிலமான குஜராத்திலோ அல்லது பாஜக ஆளும் இதர மாநிலங்களிலோ தாராளமாகத் தொடங்கிக் கொள்ளலாம் என்றும், அதற்குத் தமிழ்நாட்டைப் பலிகடா ஆக்கக் கூடாது என்றும் காரசாரமாகப் பேசியுள்ளார்.
எனவே, தமிழக மக்களின் நலன்களையும், குறிப்பாகத் தூத்துக்குடி மண்டலப் பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, வேதாந்தா குழுமத்தின் புதிய திட்டத்திற்குத் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் எக்காரணம் கொண்டும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று தனது அறிக்கையின் வாயிலாக அவர் மிகக் கடுமையான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
