LATEST NEWS
மீண்டும் சீரழியும் குடும்பங்கள்…இது என்ன டிரஸ்ஸு? அவனை வெளியே வர சொல்லு…வீட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலன்…இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலால் பட்டுக்கோட்டையில் அரங்கேறிய ரத்தக் களறி…!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவியைக் கத்தியால் வெட்டிவிட்டு, ஐந்து வயதுக் குழந்தையுடன் கணவன் தலைமறைவான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயில் பாளையம் பகுதியில் வசித்து வந்த டிரைவர் தர்மராஜ் – அட்சயா தம்பதியினருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சி ஜோஸ் என்பவருடன் அட்சயாவுக்கு ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை தர்மராஜ் பலமுறை கண்டித்தும் அட்சயா தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு வருடப் பிரிவிற்குப் பின், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர்கள் மீண்டும் பட்டுக்கோட்டையில் குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், அங்கேயும் ஜோஸ் வந்ததால் ஆத்திரமடைந்த தர்மராஜ், மனைவியை வீட்டில் வைத்து கையும் களவுமாகப் பிடித்து வீடியோ எடுத்துள்ளார்.
அதன்பின்னர், தன் மனைவியைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, குழந்தையுடன் தர்மராஜ் தலைமறைவானார். தப்பியோடும் முன் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவுகள் காண்போர் நெஞ்சை உலுக்குவதாக இருந்தன. தனது ஐந்து வயது மகனிடம் “என்னை மன்னிச்சிடுடா தம்பி, நான் செத்துட்டா நீ நல்லா வளரணும்” என்று கண்ணீர் மல்கக் கூறுவதும், அதற்கு அந்தப் பிள்ளை பயந்து கதறுவதும் பதிவாகியிருந்தது. மேலும், “என் குடும்பம் அழியக் காரணமான ஜோசுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் கொடுங்கள், இல்லாவிட்டால் இன்னொரு குடும்பமும் நாசமாகிவிடும்” என்று காவல்துறையினருக்கு மரண வாக்குமூலம் போல தர்மராஜ் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கிடையே, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கழுத்து மற்றும் கன்னத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் அட்சயா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மராஜ் வெளியிட்ட வீடியோக்களின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், தஞ்சாவூர் அருகே வல்லத்தில் தர்மராஜையும் அவரது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை மகளிர் காவல் நிலையத்திலும், தர்மராஜ் பட்டுக்கோட்டை காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடுகளால், பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அவலநிலை எப்போது முடிவுக்கு வரும் என்ற சமூகக் ஆதங்கத்தையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
