LATEST NEWS
“செல்போன் தர மாட்டியா…?” தங்கையுடன் சண்டை போட்ட அக்கா… 12-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மூத்த மகள் திவ்யபாரதி (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து இல்லம் திரும்பிய திவ்யபாரதிக்கும், அவரது தங்கை ரமணிக்கும் (14) இடையே கைபேசியை பயன்படுத்துவது தொடர்பாக வீட்டின் பொதுவெளியில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான திவ்யபாரதி, யாரிடமும் பேசாமல் தனி அறைக்குச் சென்று தனது துப்பட்டாவால் அங்கிருந்த இரும்பு கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு பதறியடித்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு அவசரச் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த மாணவியின் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வீராணம் காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாதாரணக் குடும்பத் தகராறில் பள்ளி மாணவி விபரீத முடிவு எடுத்தது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
