CRIME
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… ஆந்திராவில் குடிநீர் சண்டையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம…! இணையத்தில் குவியும் கண்டனங்கள்..!!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கிருஷ்ணபாபு காலனியில், வீட்டு உபயோக குடிநீர் மோட்டார் இணைப்பு தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடுரோட்டில் இழுத்து வரப்பட்டு, ஆடை கிழிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது நகைகள் மற்றும் செல்போனும் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க வந்த பெண்ணின் மூத்த மகனையும் அந்த கும்பல் கம்பி அல்லது ஒயரால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றபோது, அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் இணைந்து அவர்களைக் காப்பாற்றி, பெண்ணுக்கு உடைகளை வழங்கிப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய முக்கியக் குற்றவாளியான, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வார்டு செயலாளர் மல்லேலா வெங்கட ரமண மூர்த்தி என்பவரைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த வன்முறையில் ஈடுபட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு திருநங்கை உட்பட மொத்தம் ஒன்பது பேரைக் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தபோது உடனடியாக வழக்குப் பதிவு செய்யத் தவறியதாக நகராம்பாளைய காவல் நிலைய வட்ட ஆய்வாளர் சத்யநாராயணா பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். எந்தவொரு பெண்ணின் கண்ணியத்திற்கும் பங்கம் விளைவிப்பதை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும், அரசியல் பின்னணியைக் காட்டி சட்டத்திலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ரமண மூர்த்தியைத் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கி அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
