CRIME
ரூ.150 கோடி சொத்துக்காக வெறிச்செயல்..! குடிகார மகனைக் கண்டித்த பெரும் விவசாயி தந்தை.. முகம், நெஞ்சில் 4 குண்டுகளைப் பாய்ச்சி கொடூரக் கொலை..!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடிநகர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான தந்தையை, அவரது மூத்த மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் புதன்கிழமை (ஜூலை 15, 2026) நள்ளிரவு அரங்கேறியுள்ளது. உயிரிழந்தவர் புதானா கிராமத்தைச் சேர்ந்த 52 வயது விவசாயி ஹரிஓம் சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பகுதியின் பெரும் செல்வந்தரான இவருக்கு டெல்லி-மீரட் சாலையில் சொந்தமாக ஒரு மார்க்கெட்டும், 75 பிகா நிலமும் உள்ளன.
ஹரிஓம் சவுத்ரியின் 32 வயது மூத்த மகன் நிகில், மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தந்தை அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். ஏற்கனவே நிகிலுக்கு மார்க்கெட்டில் சில கடைகளையும், 25 பிகா நிலத்தையும் ஹரிஓம் பிரித்துக் கொடுத்துள்ளார். எனினும், மீதமுள்ள சொத்துகளையும் தன் பெயருக்கு மாற்ற வேண்டும் என நிகில் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு ஹரிஓம் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கடுமையான சொத்துத் தகராறு நீடித்து வந்துள்ளது.
சம்பவத்தன்று நள்ளிரவில் நிகில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, தந்தை அவரைக் கண்டித்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நிகில், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துத் தந்தையின் முகம், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 4 முறை கொடூரமாகச் சுட்டுவிட்டு ஆயுதத்துடன் தப்பியோடினார். ஏற்கனவே 2018-ஆம் ஆண்டில் நிகில் தனது தம்பி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது தப்பியோடிய நிகிலைப் பிடிக்கக் காவல்துறையினர் 4 தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
