CRIME
பகீர்..! பக்கத்து வீட்டாரைப் பழிவாங்க… சொந்த மகளையே கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்…! பீகாரில் கொடூரம்…!!
பீகாரின் அராரியா மாவட்டம், ஜோகிஹாட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஹயாதர் கிராமத்தில் 29 வயதான ஜும்னி என்ற பெண் கூர்மையான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆரம்பத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமது அஜீஸ் என்பவரின் மகனுடன் ஏற்பட்ட நெல் வயல் தகராறு மற்றும் கொலை மிரட்டல் காரணமாகவே இந்த கொலை நடந்ததாகக் கருதப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பக்கத்து வீட்டினர் மீதே குற்றம் சாட்டியதால், காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரைக் கைது செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
ஆனால், இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பமாக, பிரேதப் பரிசோதனை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய ஜும்னியின் தந்தை மொஹ்சினிடம், அவரது மனைவி பாத்திமா உண்மையை ஒப்புக்கொண்டார். பக்கத்து வீட்டினரைப் பழிவாங்கி அவர்களைக் கொலை வழக்கில் சிக்க வைப்பதற்காக, தாயும் இளைய மகள் ஆஷியானாவும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இரவில் தூங்கிக் கொண்டிருந்த ஜும்னியை அவர்களே கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, காலையில் எழுந்து பக்கத்து வீட்டினர் மீது பழியைப் போட்டு நாடகமாடியது தெரியவந்தது.
உண்மையை அறிந்த தந்தை மொஹ்சின் உடனடியாக ஜோகிஹாட் காவல் நிலையத்திற்குச் சென்று அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் தாய் பாத்திமாவையும் தங்கை ஆஷியானாவையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, கொலையாளி பயன்படுத்திய கூர்மையான ஆயுதமும் மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தடயவியல் குழு ஆதாரங்களைச் சேகரித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
