CRIME
ஒருதலைக் காதலால் கொடூரம்… அலற அலறப் பெண்ணைக் கொன்றுவிட்டுத் தப்பிய கொலையாளி..! போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை..!!
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் தாலுகாவில் உள்ள பி.சி. ரோடு அரசுப் பேருந்து நிலையத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் பன்ட்வால் தாலுகாவைச் சேர்ந்த லாவண்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவிட்டு மாலையில் பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து நிலையப் பகுதியில் வைத்து அவர் மீது இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இக்கொடூரச் செயலைச் செய்தவர் லாவண்யாவின் தூரத்து உறவினரான சேத்தன் என போலீசார் கண்டறிந்துள்ளனர். சேத்தன், லாவண்யாவை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பேருந்து நிலையத்திற்கு வந்த சேத்தன், லாவண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவர் தனது பையிலிருந்து அரிவாளை எடுத்து லாவண்யாவைத் துரத்தித் துரத்திக் கொடூரமாக வெட்டியுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதல் மற்றும் கொலையாளி தப்பியோடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு குற்றவாளி சேத்தன் ஆயுதத்தை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த லாவண்யாவை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு பன்ட்வால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து பன்ட்வால் நகர காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க தட்சிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. அருண் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
