CRIME
“லோன் ஆப்” கொடூரம்…! ஆபாச புகைப்படங்களை அனுப்பி.. இளைஞர் அறையில் சிக்கிய 2 பீடி துண்டுகள்… 24 வயது இளைஞர் தற்கொலையில் திருப்பம்…!!
ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் ஆபாசப் புகைப்பட மிரட்டல் மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக, செங்கல்பட்டு அருகே 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர், தனது அன்றாடத் தேவைகளுக்காக ஆன்லைன் லோன் செயலிகள் மூலம் பல கட்டங்களாக ₹6,000 முதல் ₹33,000 வரை கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், கடன் வாங்கிய சில நாட்களிலேயே அசல் தொகையை விட பல மடங்கு கூடுதல் பணம் தருமாறு அந்தச் செயலியின் பிரதிநிதிகள் மணிகண்டனைத் தொடர்ந்து வற்புறுத்தி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
பணம் செலுத்தத் தாமதமானதால், அந்தச் சட்டவிரோத கும்பல் மணிகண்டனின் கைபேசித் தொடர்புகளைத் திருடி, அவருடைய புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்து அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. “கேட்ட தொகையைக் கட்டாவிட்டால் உனது ஆபாசப் படங்களை உனது பெற்றோர், அக்கா மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுவோம்” எனத் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் சமூகத்தில் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த மணிகண்டன், பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்துத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிங்கப்பெருமாள் கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சைபர் கிரைம் உதவியுடன் மணிகண்டனின் கைபேசிக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, மணிகண்டனின் அறையில் இரண்டு பீடி துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால், யாராவது நேரில் வந்து மிரட்டினார்களா என்ற கோணத்திலும் தடய அறிவியல் துறை மூலம் விசாரணை தற்பொழுது தீவிரமடைந்துள்ளது. இத்தகைய ஆன்லைன் லோன் ஆப் மிரட்டல்களுக்கு ஆளாகும் பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி உடனடியாகக் காவல்துறை அல்லது சைபர் கிரைம் உதவி எண்களை (1930) அணுகிப் புகார் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
