LATEST NEWS
ரூ.20 வேண்டாம்.. ரூ.500 கொடு..! மறுத்த வாலிபரின் நெஞ்சை யானையால் மிதிக்க வைத்த சாமியார்… விலா எலும்புகள் நொறுங்கி உயிருக்கு போராடும் வாலிபர்..!!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தின் பாட்டன் காவல் எல்லைக்குட்பட்ட பாண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற வாலிபர், கோதுமை அரைப்பதற்காக மாவு மில்லுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு சாமியார் தனது யானையுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். கடவுள் பக்தி மற்றும் யானை மீதான பாசத்தால், பிரபு தன்னிடம் இருந்த 20 ரூபாயை அந்த யானையிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த சாமியாரோ 20 ரூபாய் போதாது என்றும், தனக்கு 500 ரூபாய் வேண்டும் என்றும் பிரபுவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரபு அவ்வளவு பணம் தர முடியாது என்று மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
பிரபு கூடுதல் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த சாமியார், வாலிபரைத் தாக்குமாறு தனது யானையைத் தூண்டிவிட்டுள்ளார். சாமியாரின் கட்டளையை ஏற்ற யானை, உடனடியாக பிரபுவை தனது தும்பிக்கையால் தூக்கி சாலையில் தூக்கியெறிந்துள்ளது. அத்துடன் நிற்காமல், கீழே விழுந்த அந்த வாலிபரின் நெஞ்சுப் பகுதியில் தனது காலால் மிதித்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் பிரபுவின் நெஞ்சுப் பகுதி நசுங்கி, பல விலா எலும்புகள் உடைந்தன. இதனால் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து யானையிடமிருந்து அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
படுகாயமடைந்த பிரபு முதலில் உள்ளூர் மருத்துவமனையிலும், பின்னர் பன்ஸ்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக உதய்பூர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரை மாற்றியுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாட்டன் காவல் நிலைய போலீசார் உடனடியாக விரைந்து செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட சாமியாரைக் கைது செய்து காவலில் எடுத்தனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட யானையையும் போலீசார் பறிமுதல் செய்து அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
