LATEST NEWS
ரேஷன் கார்டு வச்சிருக்கவங்களுக்கு சூப்பர் நியூஸ்..! மொத்தமாய் மாறப்போகுது.. டெல்லி அரசின் மெகா பிளான்..!!
ரேஷன் விநியோக சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், தில்லி அரசு ‘ஸ்மார்ட் பொது விநியோக முறை’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருட்கள் எப்போது கிடைக்கும், அவை எங்கு விநியோகிக்கப்படுகின்றன போன்ற விவரங்களை தங்களின் அலைபேசி மூலமாகவே எளிதாகக் கண்காணித்துத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த புதிய ஆன்லைன் தளம் மூலமாக, பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும். மேலும், தங்களின் ரேஷன் கார்டுகள் க்யூஆர் குறியீடுகள் கொண்ட ‘ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளாக’ மேம்படுத்தப்படும். இந்த க்யூஆர் வசதி ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட போலி கார்டுகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்து தடுக்க அதிகாரிகளுக்கு உதவும்.
பயனாளிகளின் அடையாளத்தை மிகவும் துல்லியமாகச் சரிபார்க்கும் வகையில், இதில் கூடுதல் வசதியாக ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியாகப் பதியாத முதியவர்கள் போன்றோருக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்தத் திட்டத்தை முறையாக ஆய்வு செய்து பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தில்லி அரசு 16 பேர் கொண்ட ஆய்வுக் குழுவையும் அமைத்துள்ளது.
