LATEST NEWS
பெற்ற மகன் போல வளர்த்தவளுக்கே இந்த கதியா?…சாப்பாடு போட மறுத்ததால் கத்திக்குத்து… போதை வாலிபரின் வெறிச்செயல்…10 ஆண்டு பாசத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த கொடூரம்…!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவம்பாடி கிராமத்தில், உணவு வழங்க மறுத்த காரணத்திற்காக 52 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த யசோதா என்ற பெண்ணின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது மகன் சேட்டு தனிக்குடித்தனம் சென்றதால் யசோதா தனியாகத் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது, வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற 34 வயது இளைஞர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதிக்கு வந்து கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். யசோதா அந்த வாலிபரைத் தனது சொந்த மகன் போலக் கருதி, தனது வீட்டிலேயே தங்க வைத்து தினமும் உணவு வழங்கிப் பராமரித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த விவகாரம் யசோதாவின் மகன் சேட்டுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞருக்குத் தொடர்ந்து உணவு வழங்க வேண்டாம் என அவர் தனது தாயைக் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். மகனின் பேச்சைக் கேட்டு யசோதாவும் கடந்த சில நாட்களாக மூர்த்திக்கு உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளார். இதனால் கடும் மனவேதனையில் இருந்த மூர்த்தி, இன்று அதிகாலை முழு போதையில் யசோதாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். “ஏன் எனக்கு உணவு தர மறுக்கிறாய்?” எனக் கேட்டு யசோதாவிடம் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே பெரிய தகராறாக மாறியுள்ளது.
தகராறு முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மூர்த்தி, “எனக்கு சோறு போடாத நீ உயிரோடு இருக்காத சாவு” என்று கத்திக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதாவின் கழுத்துப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த யசோதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த சுப்பிரமணி என்பவர் கூச்சலிடவே மூர்த்தி அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்து வந்த போளூர் போலீசார் யசோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மூர்த்தியைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார், உணவு அளிக்காதது மட்டும்தான் காரணமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
