LATEST NEWS
தூண்டிலில் புழு வைச்சு மீன் பிடிக்கிறாங்க…65% மக்கள் விஜய்க்கு எதிராக இருக்கிறார்கள்… தவெகவின் 35% வாக்கு வங்கி ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர்…சனிக்கிழமை தவெக செய்யும் வேலையை தோலுரித்த ஆர்.பி.உதயகுமார்…!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு (தவெக) பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவெகவில் சனிக்கிழமைதோறும் ஆள் பிடிக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தூண்டிலில் புழுவை வைத்து மீனைப் பிடிப்பதைப் போன்றது என்றும் சாடியுள்ளார். தூண்டில் புழு என்பது மீனின் நலனுக்காக அல்ல, அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து, இத்தகைய முயற்சிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய்யின் தற்போதைய தேர்தல் வெற்றி என்பது அவரது சினிமா கவர்ச்சி மற்றும் வசீகரத்தால் கிடைத்தது என்று குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், அந்த வசீகரம் என்றும் நிரந்தரமானது அல்ல என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், தவெகவினர் சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டுபவர்கள், அவருக்கு எதிராக வாக்களித்த 65 சதவீத வாக்காளர்களின் மனநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைவர் விஜய்யை சாதாரண மக்கள் நேரில் சந்திப்பதே எளிதான விஷயமாக இல்லை என்றும், ஜனநாயக அரசியலில் இதுபோன்ற நிலைமை மிகவும் வருத்தத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
வசீகரத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருந்தாலும், அவரது அரசு விவசாயிகளின் பயிர்க்கடன் பிரச்சினை, தடையில்லா மின்சாரம் வழங்குதல், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிலரை நீண்ட காலமும் பலரை சில காலமும் ஏமாற்றலாம், ஆனால் அனைவரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
