LATEST NEWS
“பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்…” ஓமன் கடற்பரப்பில் பலியான இந்திய மாலுமியின் கடைசி உருக்கமான குறுஞ்செய்தி….!!
ஓமன் கடற்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான 3 இந்திய மாலுமிகளில், கப்பலின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் ஒருவர் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக இத்துறையில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, பார்கவி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
வழக்கமாகத் தினமும் காலையிலும் இரவிலும் தனது மனைவிக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்த சுரேஷ், விபரீதம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, “இரவு வணக்கம், பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று தனது கடைசிப் பதிவை அனுப்பியுள்ளார். மறுநாள் காலை அவரது வழக்கமான செய்திக்காகக் காத்திருந்த குடும்பத்தினருக்கு, அவர் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த அதிர்ச்சித் தகவலே வந்து சேர்ந்தது.
துரதிர்ஷ்டவசமாக, மற்றொரு அதிகாரிக்கு மாற்றாக வெறும் 10 நாட்கள் பணிக்காக மட்டுமே சுரேஷ் இந்த எதிர்பாராத கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்; ஆனால் சீனப் புத்தாண்டு விடுமுறை மற்றும் போர் பதற்றம் காரணமாக அவரால் திட்டமிட்டபடி தாயகம் திரும்ப முடியாமல் போனது.
வருகின்ற ஜூன் 24-ஆம் தேதியுடன் இத்தம்பதிக்கு 15-ஆவது திருமண நாள் வரவிருந்த சூழலில், ஊருக்குத் திரும்பி ஒட்டுமொத்தக் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாட அவர் திட்டமிட்டிருந்த கனவு இந்தத் கொடூரத் தாக்குதலால் பாதியிலேயே கலைந்துபோனது. எதிர்பாராத அடுத்தடுத்த சிக்கல்களால் கடலிலேயே நீண்ட நாட்கள் தங்கியிருக்க நேரிட்ட தனது கணவர், தற்பொழுது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி பார்கவி கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
