LATEST NEWS
“டைவர்ஸ் ஆச்சா சார்..? சீரியலை மிஞ்சிய நிஜ நாடகம்… ரகசிய கல்யாண மண்டபத்திற்கே ‘என்ட்ரி’ கொடுத்து..! கணவரை தூக்கிய மனைவி..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் சகேரி பகுதியில், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. சாமன்கஞ்சைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், ஜூஹி லால் காலனியைச் சேர்ந்த நபருக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2024-இல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும், அந்த நபர் தனது மனைவியுடன் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் பேசி வந்த நிலையில், தான் இரண்டாவது திருமணம் செய்யவிருக்கும் தகவலை அவரிடம் முற்றிலும் மறைத்து வைத்துள்ளார்.
தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருக்கும் செய்தியை பக்கத்து வீட்டுக்காரர் மூலம் அறிந்த முதல் மனைவி, உடனடியாகத் தன் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு எவ்வித தகவலும் கிடைக்காததால், விவரங்களைத் திரட்டி தனது சகோதரி மற்றும் காவல்துறையினருடன் சகேரியில் உள்ள திருமண மண்டபத்திற்கு இரவு 10:30 மணியளவில் சென்றுள்ளார். மாலை மாற்றும் சடங்கிற்குச் சற்று முன்பாக காவல் துறையினருடன் மனைவி அங்கே வந்ததைக் கண்டு, மணமகன் தப்பியோட முயன்றதால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் சகேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால், தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல் மனைவி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மணமகனைக் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
