LATEST NEWS
என்னை கைது செய்யுங்கள்… நான் செத்துப்போனால் அதற்கு நீங்க தான் பொறுப்பு…. மருத்துவமனையில் போலீசாருடன் சோனம் வாங்சுக் கடும் வாக்குவாதம்..!!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் அமைப்புகளுடன் இணைந்து 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை மருத்துவமனையை விட்டு வெளியேற விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறி, அவருக்கும் போலீசாருக்கும் இடையே ஆவேசமான வாக்குவாதம் ஏற்பட்டது. “என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக ஏன் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? எனக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்களே பொறுப்பு” என்று போலீசாரிடம் கூறி மருத்துவமனை நடைபாதையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் வெளியிட்ட வீடியோவில், வடகொரியாவில் இருப்பதைப் போலத் தன்னை ஒரு கைதியைப் போல நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த சர்ச்சை தொடர்பாக சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. சோனம் வாங்சுக்கை அவர் விரும்பும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாகச் செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான எழுத்துப்பூர்வ உத்தரவு நகல் மருத்துவமனை நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வரை சட்டப்பூர்வமாக அவரை அனுப்ப முடியாது என்பதால், உத்தரவு நகல் வரும் வரை மட்டுமே காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தியதாக மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவு நகல் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த பிறகு சோனம் வாங்சுக் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்ற அரசின் உறுதியைத் தொடர்ந்து, தனது 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் முறைப்படி முடித்துக் கொண்டார்.
