LATEST NEWS
‘தார்’ காரில் துப்பாக்கிக் குண்டு… கால்வாயில் சடலம்… சாமர்த்தியமாகச் சரணடைந்து நாடகமாடிய கணவன்..! விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 23 வயதான சட்டக் கல்லூரி மாணவி அதிீலா ரஹ்மான், அவரது கணவர் குல்ஃபாம் அலியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹைதராபாத்தில் சட்டப்படிப்பு படித்து வந்த அதிீலாவும் குல்ஃபாம் அலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நோய்டாவில் வசித்து வந்தனர். அதிீலா தனது கணவரின் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டதோடு, அவருக்கு ஒரு மகிந்திரா தார் காரையும் பரிசாக அளித்திருந்தார். இருப்பினும், குல்ஃபாம் தனது குடும்பத்துடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று அதிீலா வற்புறுத்தியதால், இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த ஜூன் 25 அன்று தேர்வு எழுதச் சென்ற அதிீலா, டெல்லி சென்றடைந்த பிறகு குடும்பத்தினருடன் தொடர்பை இழந்தார். ஜூன் 29 அன்று டெல்லியிலிருந்து மொராதாபாத் நோக்கிச் செல்லும்போது, நெடுஞ்சாலையில் இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குல்ஃபாம், அதிீலா பரிசளித்த அதே தார் காரின் உள்ளேயே வைத்து அதிீலாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், உடலின் அடையாளத்தை மறைப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஒரு கால்வாயில் அவரது உடலை வீசிவிட்டுத் தப்பியோடினார்.
போலீசாரின் சந்தேகத்திலிருந்து தப்பிப்பதற்காக, குல்ஃபாம் வேறொரு பழைய குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்குச் சென்றார். ஜூலை 4 அன்று கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடலின் அடையாளம் 72 மணி நேரமாகத் தெரியாததால், உத்தரகாண்ட் போலீசார் இறுதிச்சடங்கு செய்தனர். அதன்பின், கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த மொராதாபாத் போலீசார், சிறையிலிருந்த குல்ஃபாமை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மனைவியைக் கொன்றதை ஒப்புக் கொண்டார். தற்போது குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து போலீசார் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
