LATEST NEWS
260 பேர் பலி…வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயம்… தூக்கமில்லாத இரவுகள்…ரத்தக் கறை படிந்த டி-சர்ட்…உலகையே உலுக்கிய அந்த விபத்தின் ஓராண்டு நினைவு…லெய்செஸ்டரில் வாழும் ரமேஷின் தற்போதைய சோகம்…!
சரியாக ஓராண்டிற்கு முன்பு, 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், தரையிறங்கிய சில வினாடிகளிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 260 பேரின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கிய இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக ஒரேயொரு நபர் மட்டுமே உயிர் பிழைத்தார். அவர்தான் விஸ்வாஷ்குமார் ரமேஷ் (39). விபத்து நடந்த இடத்திலிருந்து ரத்தக் கறைகளுடன் அவர் நடந்து வந்த வீடியோ அன்று சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிய நிலையில், இன்று அந்த விபத்தின் வடுக்கள் இன்னும் ஆறாமல் அவர் மனதிற்குள் போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் வசித்து வரும் ரமேஷ், தான் உயிர் பிழைத்திருந்தாலும் அன்றாட வாழ்க்கை பெரும் நரகமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் தனது சொந்த சகோதரர் அஜயையும் அவர் பறிகொடுத்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் இறந்து தான் மட்டும் பிழைத்துவிட்டோமே என்ற ‘சர்வைவர் கில்ட்’ (Survivor Guilt) எனப்படும் கடுமையான குற்ற உணர்வாலும், கோர நினைவுகளாலும் தவிப்பதாகக் கூறும் அவர், இதனால் இரவு நேரங்களில் தூங்கக் கூட முடிவதில்லை என்று நெஞ்சை உருக்கும் வகையில் பகிர்ந்துள்ளார். உடல், மன மற்றும் நிதி ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்து வரும் ரமேஷ், தற்போது மற்றவர்களின் துணையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடப் பயப்படும் அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர் சஞ்சீவ் படேல் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்துக்கான பின்னணி குறித்து இந்தியப் புலனாய்வு அமைப்புகளும், இங்கிலாந்தின் விமான விபத்து விசாரணைப் பிரிவும் (AAIB) இணைந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் அகமதாபாத் சென்ற ரமேஷ், விசாரணை அதிகாரிகளை நேரில் சந்தித்து விபத்தின் போது தான் கண்ட காட்சிகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். உலக வரலாற்றின் மிக மோசமான வான்வழித் துயரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த விபத்து நடந்து ஓராண்டாகியும், இன்னும் இதற்கான இறுதி அறிக்கை வெளியாகவில்லை. அந்த அறிக்கை முழுமையாக வெளிவந்தால் மட்டுமே, 260 பேரின் மரணத்திற்கும், ரமேஷின் தற்போதைய நிலமைக்கும் காரணமான அந்த விபத்தின் உண்மையான பின்னணி என்ன என்பது உலகிற்குத் தெரியவரும்.
