LATEST NEWS
சொகுசு தேவையில்லை… சுடர்விடத் துடிக்கும் மன உறுதி போதும்…! பூ விற்கும் தாயின் அருகே சாலையோரத்தில் படித்து நெகிழ வைத்த சென்னை சிறுமியின் வைரல் வீடியோ..!!!
இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு ஏசி அறை, விலையுயர்ந்த லேப்டாப், இணைய வசதி என அனைத்து வசதிகளும் இருந்தும் படிக்க வைப்பதற்குப் பெற்றோர்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆனால், எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும், கல்வியின் மீதுள்ள தீராத ஆர்வத்தால் சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே ஒரு சிறுமி சாலை ஓரத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி மக்களின் இதயங்களை வென்றுள்ளது. சுற்றிலும் வாகனங்களின் சத்தமும், மனிதர்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தபோதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்தச் சிறுமி தனது படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்
சந்தோஷ் என்ற சமூக வலைத்தளப் பயனர் இந்த நெகிழ்ச்சியான காட்சியைத் தனது கேமராவில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சிறுமியின் தாய் அருகில் ஒரு சிறிய ஸ்டூலில் பூக்களை வைத்து விற்றுக் கொண்டிருக்க, அந்தச் சிறுமி தரையில் அமர்ந்து புத்தகங்களை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த பிறகும் கூட, அந்தச் சிறுமி படிப்பதை நிறுத்தவில்லை. அருகில் உள்ள கடைகளில் இருந்து வரும் வெளிச்சத்தை வைத்தே அவர் தொடர்ந்து படித்துக் கொண்டு இருந்துள்ளார். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அந்த குடும்பம் கடுமையாகப் போராடினாலும், கல்வி கற்பதை அந்தச் சிறுமி கைவிடவில்லை என்பதை இந்தத் தருணம் தெளிவாகக் காட்டுகிறது.
https://www.instagram.com/reel/DZrWLvmTsOg/?utm_source=ig_embed&ig_rid=AX_RPuNgB-9DeuC_RVXJSSe
இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, அந்தச் சிறுமியின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பலரும் இவரைப் பார்த்து, “வசதியான மேசையோ, சொகுசோ தேவையில்லை, சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி மட்டுமே போதும்” என்று பாராட்டி வருகின்றனர். வாழ்க்கையில் மிகச் சிறிய கஷ்டங்களைக்கூடப் பெரிதாக நினைத்து, சாக்குப்போக்குச் சொல்லித் தங்களது கடமைகளைத் தள்ளிப்போடும் பலருக்கு, மிகக் குறைந்த வசதிகளுடன் தனது கனவுகளுக்காகப் போராடும் இந்தச் சிறுமியின் உழைப்பு ஒரு சிறந்த பாடமாகவும் உந்துதலாகவும் அமைந்துள்ளது.
